இப்படியான ஒரு வாழ்க்கையை வாழ முற்படும்போது அதற்காக நாம் அவருக்கு நன்றி கூறும் மனிதர்களாக மாறி அமைவோம். இறைவனின் நன்மைத்தனம் நம் வாழ்வில் அள்ளித் தெளிக்கின்ற வசந்தங்களுக்காக நன்றி கூறுபவர்களாக நாம் இருப்போம் என்பது உறுதி!
ஆண்டவனின் தொண்டனாக நாம் அமைகின்ற போது நம் வாழ்வில் அவரை விட்டு விலகுதல் என்கின்ற வார்த்தைக்கே இடம் இருக்கப்போவதில்லை! நம் வாழ்வும் தடம் புரளாமல் சென்று கொண்டே இருக்கும்.
இயேசுவின் வாழ்க்கையைப் பின்பற்றி இறைவனின் தொண்டனாக மாறுவது சிரமமான செயலென்றாலும் அந்த இறைவனின் அருளினால் அது நிச்சயம் கை கூடும். ஆவியானவரின் வழிகாட்டலும் வல்லமையம் எந்த கடினமான பாதையாயினும் அதில் தடையின்றி பயணம் செய்ய வேண்டிய ஞானத்தையும், விவேகத்தையும், தைரியத்தையும் எமக்கு அளிக்கும்.
இயேசுவை நேரடியாக அனுபவித்தவர்களே, அவரது நன்மைத் தனத்தைக் கண்டு வியந்தவர்களே அவர் முன்னிலையில் இவர் சொல்வதை நாம் எப்படிச் செய்ய முடியும்? இவரை எப்படி நாம் பின்பற்றுவது என்று கேட்டவர்கள்தான். யோவான் நற்செய்தி 6ம் அதிகாரத்தில் இதை நாம் காண்கின்றோம். அவர்கள் சொல்வதோடு நின்று விடமால் அவரை விட்டு நீங்கவும் தலைப்படுகின்றார்கள். பொழுது போக்கிற்காக அவர் வார்த்தையைக் கேட்டுப் போக வந்த மனிதர்கள் போன்று தமக்குப் பொருந்தாத கட்டம் என்று கண்டதும் வெட்டிக் கொண்டு போகின்றவர்களாக அவர்களை நாங்கள் காணுகின்றோம்.. எல்லோரையும் புரிந்து கொண்டிருந்த இயேசு தன்னோடு நிலைத்திருந்த பன்னிருவரைக் கேட்கின்றார் அவர்களது முடிவு என்னவாக இருக்கப் போகின்றது? பேதுரு தெளிவான முடிவைச் சொல்லுகின்றார். 'வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமிருக்க. நாம் யாரிடம் போவோம்' என்ற ஞானம் மிக்க இந்த வார்த்தைகள் வழியை இயேசுவிடம் கண்டு கொண்ட ஒரு தொண்டனுடைய வார்த்தைகள்! தன்னை முற்றிலுமாக இறை சித்தத்திற்கு அர்ப்பணித்த ஒருவருடைய வார்த்தைகளல்லவா இவை! இவ்வாறான ஒரு மனப்பக்குவம்தான் இன்று நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள எமக்குத் தேவையாக இருக்கின்றன.
'வாழ்வும் வழியும் நீயாக இருக்க, என் வாழ்வைக் கொண்டு நடத்த உறுதுணையாக இருக்கக் கூடிய உன்னை விட்டு விலகுதலுமில்லை தடம் புரள்வதுமில்லை' என்று சொல்லக் கூடிய ஒரு உண்மையான தொண்டனுக்குரிய இயல்புகளை எம்மிடத்திலே நாம் வளர்த்துக் கொள்வோம்..
இதற்கு இறை சித்தம் என்பது அவசியம்! தூய ஆவியின் அருள் உதவி;யானது நிரம்பத் தேவை. இயேசுவின் வாழ்ந்து காட்டும் வழிகாட்டுதல் நமக்குத் தேவை. இவை மூன்றும் எமக்குக் கிட்டாத வரையில் சீரிய வழியில் பயணம் செய்யும் வாழ்க்கை நமக்குக் கிட்டப் போவதுமில்லை, நமது வாழ்வின் ஒவ்வொரு பொழுதிலும் நாம் அனுபவிக்கப் போகும் நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் மனிதர்களாக நாம் வாழப் போவதுமில்லை.
எனவே நம்மை முற்றிலும் இறைவனுக்கே அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, அவர் சித்தத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் வாழ்வை அமைத்துக் கொண்டு, உண்மைத் தொண்டனாக அமைந்து அவரை நன்றி கூறித் துதிப்போம்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்