LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, November 25, 2018

மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி : மாநில அமைச்சர் தங்கமணி தகவல்

‘கஜா’ புயல் ஏற்படுத்திய சேதத்தில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. இவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இப்போது ஒவ்வொரு ஊர்களுக்கும் மின் இணைப்பு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது

கஜா புயல் 110 கிமீ வேகத்தில் நாகை அருகே கரையை கடந்தபோது டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலின் கடுமையான தாக்கத்தில் 1,13,566 மின் கம்பங்கள், 1082 மின்மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் சேதம் அடைந்தன.

மின் கம்பங்களை சீர் செய்து தூக்கி நிறுத்தும் பணியில் 25 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள் இரவு- பகல் பாராது தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து பணியாற்றி வருகின்றனர்.

மழை-வெயிலுக்கு ஒதுங்கி நிற்க இடம் இல்லாத வயல்கள், வெட்ட வெளியில் ஓய்வின்றி பணியாற்றுகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு மின்கம்பங்களை தோளில் சுமந்து செல்கின்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் தண்ணீருக்குள் நின்று கயிறு கட்டி மின் கம்பங்களை தூக்கி நிறுத்துகின்றனர். வயல் வெளியில் ரோட்டிலேயே அமர்ந்து சாப்பிடுகின்றனர்.

இவர்கள் செய்து வரும் பணி மெச்சத்தக்கது. இதற்காக நான் மின்வாரிய ஊழியர்களை மனதார பாராட்டுகிறேன். பணியின்போது 2 மின் வாரிய ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையாக உள்ளது. அவர்களது குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் தலா ரூ.15 லட்சம் உதவியும், அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

போர்க்கால அடிப்படையில் மின் ஊழியர்கள் பணியாற்றி வருவதால் நகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் மின் இணைப்பு கொடுத்துவிட்டோம். பேரூராட்சி பகுதிகளில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.

வேதாரண்யம் நகரில் டவர் விழுந்து விட்டதால் அது சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் அதையும் சரி செய்து மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கிராம பஞ்சாயத்துகளில் ஒவ்வொரு ஊராக சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்துக்குள் முழுமையாக மின் இணைப்பு கிடைக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மின் கம்பங்கள் அதிகமாக தேவைப்படுவதால் ஆந்திராவில் இருந்து கூடுதலாக மின் கம்பங்களை வரவழைத்துள்ளோம். புயல் பாதித்த நாளில் இருந்து நானும் அங்கேயே முகாமிட்டு பணிகளை துரிப்படுத்தி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாகை மாவட்டம் மானுவக்காட்டுப் பாளையத்தில் மின்சார சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த மின் ஊழியர் முருகேசன் குடும்பத்துக்கு அமைச்சர் தங்கமணி ரூ.2 லட்சம் உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.200 கோடி நிதி வழங்கி உள்ளதாகவும், ஒரு வாரத்தில் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7