களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு புதிதாக சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர்
நியமிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் கே.சுகுணன் தெரிவித்தார்.
திருகோணமலையைச் சேர்ந்த வைத்தியகலாநிதி சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.றோகான்குமார் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு வருகை தந்ததைத்தொடர்ந்து இவ் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கூடம் சுறுசுறுப்பாக இயங்கத்தொடங்கியுள்ளது. இவர் திருகோணமலை இந்துக்கல்லூரியில் ஆரம்பக்கல்வியை கற்று யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் பட்டமேற்படிப்பை மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலை ஆதாரவைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பேராதனிய வைத்தியசாலை, கிண்ணியா வைத்தியசாலை ஆகியவற்றில் சேவையாற்றியுள்ளார். களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கடந்தமாதம் முதல் சத்திரசிகிச்சை நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வருகைதந்து ஒரு மாத காலத்திற்குள் இங்கு 188 சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். சத்திரசிகிச்சைக்குள்ளாகும் 750 நோயாளர்களை பார்வையிட்டுள்ளதுடன் 12 பேர் மட்டுமே பாரிய சத்திரசிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏனையோருக்கான சிகிச்சைகளை இவரே வழங்கிவருகின்றார்.
களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்குரிய வைத்திய உபகரணங்கள், வசதிகள் எதுவுமற்ற நிலையில் டாக்டர் ஆர்.றோகான்குமார் தனது அனுபவத்தின் மூலம் இங்குள்ள குறைந்தவளங்களைக் கொண்டே நிறைந்த சிறந்த சேவையினை வழங்கிவருகின்றார். குறிப்பாக இங்கு லப்ரஸ்கோப்(laparoscopy ) இயந்திரம் மற்றும் சமிபாட்டுத்தொகுதி சம்பந்தமான நோய்களை கண்டுபிடிக்கும் (endoscopy ) இயந்திரம் உட்பட சத்திரசிகிச்சைக்குரிய உபகரங்கள் அற்றநிலையில் இவ் வைத்தியசாலை காணப்படுவதாகவும் இதற்குரியவளங்களை பெற்றுக்கொள்வதற்க்கு பிரதேச சமூகம் முயற்சி எடுக்கவேண்டும் என கேட்டுள்ளார்.
வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கே.சுகுணனின் முயற்சியினால் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை பல்வேறு அபிவிருத்திகளை துரிதமாக கண்டுவருகின்றது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் ஒரே ஒரு ஆதாரவைத்தியசாலையாக இப் பிரதேசத்தில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையேயுள்ளது. இந் நிலையில் ஏ தரத்திலுள்ள இவ் வைத்தியசாலைக்குரிய சகல வளங்களை பெற்று அபிவிருத்தியடைந்த சிறந்த வைத்தியசேவையினை வழங்கும் வைத்தியசாலையாக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பணிப்பாளர் டாக்டர் கே.சுகுணன் கேட்டுள்ளார்.