இறை போதகங்களை எவரும் செய்யலாம், இறை வார்த்தை எவரும் எப்படியும் எடுத்துச் சொல்லலாம்! ஆனால் தேவன் தன்னை யாருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ? தன்னை யார் அறிந்து கொள்ள வேண்டும் என்று விழைகின்றாரோ? அவர்களால்தான் அவர் வார்த்தைகளையும், அவரையும் புரிந்து கொள்ள முடியும்.
அவரது அழைப்பு ஏதோ ஒரு கட்டத்தில் எழுந்தமானமாக அமைந்துவிடுவதில்லை. அது காலத்தின் முன்னமே நியமிக்கப்பட்டு விடுகின்றதொன்று. தாயின் கருவிலே உருவாகுமுன்னமே அவர்தம் கைகளில் பொறிக்கப்பட்டு விடுகின்ற பெயர்களுக்குரியவர்களால்தான் அவரால் அழைக்கப்படுகிறவர்கள் என்று அடித்துச் சொல்லலாம். அப்படி அழைக்கப்படுகின்றவர்கள்தான் அவரை அறிந்து அவரை மகிமைப்படுத்த முடிகிறது.
படிப்பறிவேயில்லா மீனவன் பேதுருவை அழைத்த இயேசு அவரைத் திருச்சபையின் தலையாரி ஆக்கி அவர் மூலம் தன் மாண்பை வெளிப்படுத்தவில்லையா?
இயேசுவை எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்டிராத, சந்தித்திராத ஒரு புறவினத்தவனான சவுலை இறைவன் அழைக்கின்றதன் மூலம் தன்னைப் புற இனத்தார்க்கு அறியச் செய்யும் தனது திட்டத்தை நிறைவேற்றுகின்றார்.
கடடுக்கடங்காத காட்டெருமைபோல அன்னை சிந்திய கண்ணீருக்கே மதிப்புக் கொடுக்காத அகுஸ்தினாரைத் தெரிந்து கொண்ட இறைவன் தனது திருச்சபையை அவரது எழுத்துக்களால் வளப்படுத்தும் செயலைக் காண்கின்றோம்.
பணம் படைத்த வளம் மிகுந்த குடும்பத்தின் அசிசியாரைத் தெரிந்து கொண்ட தந்தையிறைவன் அவர் மூலம் சரிவிலிருந்து திருச்சபையை மேம்படுத்தி எடுக்கின்றார்.
போர்க் குணம் கொண்டு, தன் வெற்றிகளையே நாடி உழைத்த இஞ்ஞாசியாரைத் தெரிந்து அழைத்த இறைவன் அவர் மூலம் மண்ணில் புதுமைப் புரட்சியை விதைக்கக் காண்கிறோம்.
அல்பேனியாவில் பிறந்ந அன்னை தெரேசாவை அழைத்த இறைவன் அவளைத் தம் பணிக்கான நடமாடும் புனிதையாக மாற்றி அமைத்து தம் மகிமையை வெளிப்படுத்துகின்றார்.
இப்படியாகப் பிற மதங்களின்றும் தெரிந்தெடுத்து அழைத்துக் கொள்ளப்பட்டவர்கள் பரம்பரைக் கிறீஸ்தவர்களே வெட்கும்படியாகத் தம் விசுவாச வாழ்வின் மூலம் இறை மாட்சிமைக்கான சாட்சிகளாக மற்றவர் முன் திகழவில்லையா?
இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? இந்த மண்ணில் வாழும் எவரானாலும் அவர்கள் அனைத்துப் பேரும் ஒரே தந்தையின் மக்களே. முகங்கள் எதுவானாலும், இனங்கள் எதுவானாலும், நிறங்கள் எதுவானாலும். நம்பிக்கை எதுவானாலும் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே!
யார் யாரை அழைக்க வேண்டும்... அழைத்து அவர்கள் மூலம் எந்த வகையில் தாம் மாட்சியடைய வேண்டும் என்று அவர் விரும்புகின்றாரோ அதை அப்படியே நிறைவேற்றவும் செய்கின்றார்.
அவரது அழைப்பை யாராலும் ஊதாசீனம் செய்துவிட முடியாது. மோசேயை அவர் தெரிந்து அழைத்தபோது அவரால் அந்த அழைப்புக்குத் தான் தகுதியானவனா என்ற கேள்வி எழுப்ப முடிந்ததே தவிர அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை.
யோனா அழைக்கப்பட்டபோது ஓடி ஒழிக்க முற்பட்டாலும் கூட அவரால் இறைவனது அழைப்பினின்றும் வெகு தூரம் தப்பி ஓட முடியவில்லை. குறைந்த பட்சம் ஒரு கடலைத் தானும் தாண்ட முடியாமல் போயிற்று.
தனது மகிமையைப் பறைசாற்ற இறந்தோரைக் கூட இயேசு அழைத்தபோது அவர்களால் சாவுக்குள் அடைக்கலம் தேடிக் கொள்ள முடியவில்லை. லாசர் மீண்டும் வந்தான். சிறு பெண் ஆழ் துயிலினின்றும் எழுந்து வந்தாள்.
இறைவனின் அழைப்பு நமக்கு வரும்போது, அந்த அழைப்பிற்கு இசைய நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுவே அவரது எதிர்பார்ப்பு. அதற்காகத்தான் நமக்கு ஆற்றல்கள் என்றும், அறிவுகள் என்றும், உறவுகள் என்றும் பல வளங்களையும் தந்து நம்மை வளர்த்து விடுகின்றார்.
அவற்றையெல்லாம் அந்த இறைவனின் மகிமைக்காக சமர்ப்பணம் செய்து அவரது அழைப்பைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களாய் வாழும்போது இறைவன் நம்மூலம் தம் திருச்சித்தத்தை நிறைவேற்றி மகிமை அடைகின்றார்.
ஆனந்தா ஏஜீ.இராஜேந்திரம்