பொருளாதாரம், அரசியல் ஆன்மீகம் உலகியல் என்று எதை எடுத்து நோக்கினாலும் இன்று சவால் நிறைந்த வாழ்க்கையே நாளும் நம்மை எதிர் நோக்கி நிற்பது இங்கு யதார்த்தமாகி விட்டது. இந்த நிலையில் வரவிருக்கும் மீட்பை – நமது மீட்பரை வரவேற்கின்ற தகுதியும், அவரை ஏற்றுக் கொள்கின்ற மனநிலையும் எம்மிடம் உள்ளதா என்பது பெரியதொரு கேள்விக்குறி.
எமது வாழ்வின் இந்த இக்கட்டான நிலையிலும் கூட எமது கிறீஸ்தவ வாழ்வின் அழைப்பைப் புறக்கணித்தவர்களாக நாம் வாழந்து விட முடியாது. எவ்வளவுதான் காரிருள் எம்மை சுற்றி வளைத்தாலும், மீட்பின் ஒளி நமக்காக இருக்கின்றது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடரவும் எமது படைப்பின் நோக்கம், நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்பவற்றை கடைசி மூச்சு வரை பேணிக்காக்கவும் நாம் முயல வேண்டும்.
தன் தந்தைக்காகச் சாட்சியம் சொல்ல வந்த யேசு தமது வருகையில் அந்த சாட்சியம் பகிருதலூடாக மனுக் குலத்திற்கு வேண்டும் விடுதலையை அனைத்துத் துறையிலும் பெற்றுத் தந்தார் என்பதை நாம் மறக்கக் கூடாது.
சாட்சியம் பகிரவே நாம் அழைக்கப்படுகின்றோம். கிறீஸ்துவின் சாயலைத் தாங்கியவர்களாக மனத்தாலும், வாழ்வாலும் சாட்சியம் பகிர நாம் எதிர்பார்க்கப்படுகின்றோம். அவர் வாழ்ந்து காட்டியவ hழ்வை வாழ்ந்து காட்டுமாறு நம்மை அவர் அழைக்கின்றார். தேவையிலிருந்த மக்களுக்காக அவர் எப்படி வாழந்தாரோ அப்படி வாழும்படி நாம் அழைக்கப்படுகின்றோம்.
அடுத்தவருக்காக நம்மை, நமக்குள்ளவற்றை விட்டுக்கொடுத்த நிலையில் நாம் வாழ வேண்டும். இது எம்மால் முடியுமா?
நமக்குள்ளவற்றை விட்டுக் கொடுப்பதில் ஓரளவுக்கு நம்மை நாம் ஒறுத்துக் கொள்ள முடியும். ஆனாலும் நம்மை விட்டுக் கொடுப்பதென்பதுதான் பெரும் சவால். இத்தகைய சவாலின் முதற்படி நமக்குள் இருக்கும் 'என்னை' நாம் விட்டுக் கொடுப்பதென்பது. எதையும் இழக்க முன்வரலாம். ஆனால் என்னை நான் இழந்து விட்டால். என் சுயமே மாறிப் போய்விடுமல்லவா? இதுவரைக்கும் எதற்காக நான் வாழ்ந்தேனோ அதை நான் இழந்துவிடக்கூடும். எனது கௌரவம். எனது ஆளுமை, எனது சயம் அத்தனையையும் என்னால் இழக்க முடியுமா? யேசு அப்படிச் செய்தாரா? நிச்சயமாக அவர் அப்படித்ததான் வந்தார், வாழ்ந்தார், அப்படித்ததான் தன் வாழ்வையும் ஒப்புக் கொடுத்தார்.
வேதாகமம் சொல்கிறது, கடவுள் என்கின்ற மேலான நிலையை அவர் பெரிதாகப் பற்றிக் கொண்டிருக்கவில்லை. மனிதனாக அதுவும் பயங்கரமான சாவுக்கு – அவமானம் நிறைந்த சாவுக்குத் தன்னை கையளிக்கும் படிக்கு அவர் மனிதனானார் என்று சொல்லப்படுகின்றது. மனிதன் வாழவே லாயக்கற்ற மாட்டுக் கொட்டிலில் அவர் பிறந்தார் என்றால் தன்னை அவர் எந்த அளவுக்கு விட:டுக் கொடுத்தார் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். எல்லாவற்றிலும் உச்சமாக, தான் கையளிக்கப்பட்ட இரவில் தன் தந்தையிடம் தன் கௌரவத்தை இழந்து கெஞ்சுகின்றார். தந்தையே என்னால் இயலவில்லை. . . கூடுமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கட்டும்! இதில் உச்சமாக 'ஆனாலும் நான் யார்? எனது சித்தப்படியல்ல உமது சித்தம்போல் ஆகட்டும்' என்று தன்னை அங்கே இழந்துவிடுகின்றார். அவரது உயிர் பிரிகின்றவேளையில் அவரது சுய மறுப்பு உயர்மட்டத்திற்கே போய் விடுகின்றது ஒரு மகன் தன் தந்தையிடம் கெஞ்சுவதைப் பாருங்கள். ' என் தந்தையே என் தந்தையே ஏன் என்னைக் கைவிட்டீர்?' தனது படைப்பின் நோக்கம் நிறைவேற தன்னையே முற்றிலுமாய்த் துறக்கின்ற ஒரு நிலையை அவர் நமக்கு வாழ்ந்து காட்டிநின்றார்.
நம்மால் இத்தகைய சுய மறுப்பை ஏற்று அவருக்குச் சாட்சியம் சொல்ல எம்மால் ஆகுமா? நம்மை யரும் கொஞ்சம் முறைப்பாகப் பார்த்துவிட்டாலே போதும், யாரையடா முறைக்கின்றாய் என்று சவாலுக்கழைக்கும் எம்மால் இது முடியுமா? யாராவது ஏறுக்கு மாறாகப் பேசிவிட்டால் 'யாரோடு பேசுகிறாய் என்று தெரியுமா?' என்று எச்சரிக்கின்ற எம்மால் இது ஆகுமா? யாரும் தவறாக ஏதும் பண்ணி விட்டால், நான் யாரென்று காட்டுகின்றேன் என்று கறுவிக் கொள்ளும் எம்மால் 'என்னை' விடடுக் கொடுக்க முடியுமா?
முடியும்! முடியவேண்டும். அதைத்தான் கிறீஸ்து நம்மிடம் சாட்சியமாக எதிர்பார்க்கின்றார். ஆதி காலத் திருச்சபையின் மக்களை மற்றவர்கள் ஏறெடுத்துப் பார்த்து இவர்கள் யார் என்று உற்றுப்பார்க்க வைத்து அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைத் தாமும் பின்பற்ற முனைந்ததால்தான் கிறீஸ்தவம் வளர்ந்தது. திருச்சபையும் தழைத்தது!
சுமாதானத்தின் தேவனுடைய வருகையை நோக்கி நிற்கின்ற இவ்வேளையில் அவருக்குச் சாட்சிகளாய் மாறிநின்று அவரை வரவேற்க நம்மை முற்றிலுமாக அர்ப்பணிப்போம்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்