மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் இரத்நாயக்க, 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெப்பங்களை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்த ஆவணத்தில், ஜேவிபி உறுப்பினர்கள் ஆறு பேர், ஐதேமு மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 102 பேர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 14 பேர் ஒப்பமிட்டுள்ளனர்.
கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், அண்மையில் மகிந்த அரசில் இணைந்து கொண்ட வியாழேந்திரனும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான இந்தப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை.
இதையடுத்து, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும், அதற்கு ஆதரவளித்த 122 உறுப்பினர்களின் கையொப்பம் என்பன, மேலதிக நடவடிக்கைகளுக்காக மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் சபாநாயகர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.