———- நமசிவய வாழ்க ———-
முழுமுதற் கடவுள் என்பார்
மூவரில் ஒருவர் என்பார்
முப்புரம் எரித்த தேவன்
புடவியை ஆக்கி காத்து
ஊழியில் ஒடுக்கி யாவும்
அழிப்பவன் தீமை எல்லாம்
பிறப்பொடு இறப்பும் இல்லா
ஆதியாம் சோதி நாதன்
நான்மறை வேதம் எல்லாம்
நாயகன் புகழைப் பாடும்
திருமுறை பதிகம் யாவும்
பசுபதி சிறப்பை கூறும்
ஆகமம் யாவும் அண்ணல்
வடிவங்கள் விளக்கி சொல்ல
மூவகை உலகில் உள்ளோர்
போற்றிடும் யோக நாதன்
சாம்பலோ தேகம் எல்லாம்
சர்ப்பமே அணியும் செம்மல்
சடைவிரி சிகையில் என்றும்
சந்திரன் கங்கை சூட்டி
மங்கைதன் பாகம் ஆக்கி
மானொடு மழுவும் கொண்டே
மலையினில் உறையும் எங்கள்
மாண்புறு கைலை நாதன்
மந்திர சூலம் என்னும்
மூன்றுகூர் அயிலும் கையில்
யந்திர வேகம் மிஞ்சும்
பெரும்கணப் படையும் சூழ
இந்திரன் முதலே ஆன
வானவர் தொழுதே போற்ற
அதிரவே அண்டம் எல்லாம்
ஆடுமெம் சூல நாதன்
சுந்தர வதனம் இன்னும்
பொன்நிற மேனி மின்னும்
சந்திர சூரியர் போல்
கண்களும் மேலும் மின்னும்
வில்லுறு புருவ மத்தி
அக்கினி சுடர் என்றாக
ஒளிர்க்குமா நெருப்பு அதனில்
மிளிருவான் ஏக நாதன்
புன்னகை சிந்தும் அந்த
பன்னவன் வாயே என்றும்
பொன்னகை ஏதும் இல்லா
அன்னவன் மேனி எல்லாம்
திண்திற தோள்கள் இரண்டும்
விரிந்திட இருக்கும் மார்பும்
ஒட்டிய வயிற்றை கொண்டோன்
மூப்பிலா மூல நாதன்
புலிவரி தோலில் அன்னான்
ஆடையை அரைக்கே ஏற்றி
கரியுரி போர்தி செம்மல்
வழுவுடை பாதம் கொண்டோன்
பணியும் தன்பக்தர்க்கு எல்லாம்
அருளினை அள்ளி நல்கி
பாவமாம் யாதும் இங்கே
கழுவுவான் கபால நாதன்
புவிதனை தோண்டி என்றும்
மாலுமே அறியாப் பாதம்
மலைதனை பிளந்த போது
இராவணன் காண செய்தான்
மண்ணிலே அடியார் கெல்லாம்
புண்ணியம் நல்கும் சிவனாம்
நிகரது என்றும் இல்லா
நிர்மலன் நிமல நாதன்
எண்ணினும் பெரியான் என்றே
நம்புவார் நாளும் காப்பான்
நமனையும் உதைத்தே விரட்டி
மாறிலா வயதை ஈந்தான்
எலியதை மாபலி ஆக்கிய
அற்புதன் அரனார் வணங்க
வாணுயர் வரத்தை நல்கி
அருளுவான் தில்லை நாதன்
வாரணம் பலத்தை ஒக்கும்
வரையினின் உறுதி ஒக்கும்
நீரினில் முதலை ஒக்கும்
நிலைபெற மனத்தை ஆக்கி
கனவினில் நினைவில் எல்லாம்
சிவத்தினில் உருகி நித்தம்
மிதக்குமப் பேற்றை நாளும்
அருளுவான் சொக்க நாதன்
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏