நல்ல மனிதனின் சிந்தனை சொல் செயல் என்றுமே மாறுபாடு இல்லாமல் இருக்கும். நெஞ்சில் தெளிவும், இறை அருளும், பொது நலமும் நிறைந்தவர் வாழ்வில் இம்மூன்ற அம்சமும் இணைந்தே இருக்கும்.
ஓன்றைச் சிந்தித்து, இன்னுமொன்றைப் பேசி, வேறொன்றைச் செய்பவர் நேர்மையான மனிதராக இருக்கவே முடியாது! அவர்களைத் தலைவர்களாக என்ன மனிதர்களாகக் கூட கணக்கெடுக்கமுடியாது. யேசு வாழ்ந்து போதித்து, அற்புதங்கள் நிகழ்த்தி வாழ்ந்தபோது மனிதருக்கு நன்மையைத் தவிர வேறொன்றையும் நினைத்ததுமில்லை, சொன்னதுமில்லை, செய்ததுமில்லை. இருந்த போதும் பல கட்டங்களில் அவர் பரிகசிக்கப்பட்டிருக்கிறார். குற்றஞ் சுமத்தப்பட்டிருக்கின்றார். கொலை முயற்சிகளிலிருந்து தப்பிக்கவும் செய்திருக்கிறார்.
சாதாரணமான புதுமைகளையல்ல செத்தவரையே மீட்டுத்தந்த அற்புதங்களை நிகழ்த்திய அவரைக் கூட வெறுக்கவே செய்தார்கள். அவரது நோக்கம் அன்றைய மக்களை அணைத்தெடுத்து தந்தை இறைவன் அண்டை சேர்க்கவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. காலா காலமாய் அவர்கள் மத்தியில் அனுப்பிய தூதரையெல்லாம் ஒரு கை பார்த்த அவர்களை - அவர்களுக்குச் சொல்லப்பட்ட தூதுரைகளையெல்லாம் ஒதுக்கி விட்டவர்களை புறக்கணித்துவிட இறைவன்; விரும்பவில்லை தனது மகனைத் தூது அனுப்பினால் ஏற்றுக் கொள்வார்கள் என்றே அவரை மண்ணுக்கு அனுப்பினார்.
மக்கள் அனைத்துப் பேருமே அவரை வெறுக்கவில்லை. அவரை ஆதரிப்போரும் நிறையவே இருந்தனர். ஆனாலும் அவர்களது குரல்தான் ஓங்கி ஒலிக்கவில்லை. அவர்கள் அடிமட்ட மக்கள் - ஒடுக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். ஏழைகளாக இருந்தார்கள். எனவே ஒதுங்கி வாழ்ந்தார்கள். ஏற்கனவே அவர்கள் உரோமை சாம்ராச்சியத்தினால் அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டிருந்த காரணத்தால் அஞ்சி வாழ்ந்தே பழக்கப்பட்டிருந்தார்கள். அது மட்டுமல்ல, தமது சமயத் தலைவர்களாலேயே அவர்கள் தலையெடுக்கப்பட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இப்படியாக மனிதத்துவமே இல்லாத சூழ்நிலையினின்று அவர்களை மீட்டெடுப்பதுவே தமது தலையான பணியாக யேசு எடுத்துக் கொண்டபடியினாலே பல கோணங்களினின்றும் எதிர்ப்புக்கள் தலை தூக்கவே செய்தன. அத்தனை எதிர்ப்புக்களும் யேசுவினால் தமக்கும் தமது வாழ்க்கை முறைக்கும் பாதிப்பு வரும் என்று அஞ்சியவர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டன. தாம்தான் தலைவர்கள் என்றும் தாம் சொன்னவைகளே நிகழவேண்டும் என்றே அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் சொகுசு வாழ்வைத் தேடி கபடத்தனமாகச் சிந்தித்தார்கள், மக்களை அதற்கேற்ப சட்டங்களையும், சம்பிரதாயங்களையும் சொல்லி அடக்கி வைத்தார்கள், ஆனால் அவர்களது நடைமுறையோ வேறாக இருந்தது.
யேசுவின் செயன்முறை அன்றைய தலைவர்களிடமிருந்து வித்தியாசமானதாக இருந்தது. தனக்காக வாழாத ஒருவரை அங்கு கண்டார்கள். தம்மை முற்றிலும் தம் பணிக்கு அர்ப்பணித்த ஒருவராக அவர் இருந்தார். இதனால் புதியதைக் கண்ட பாமரர்கள் அவரை ஏற்றுக் கொண்டார்கள்.
இன்றைய நம் வாழ்வு கூட பல தடவைகளில் அந்த சிந்தனை சொல் செயல் என்ற மூன்றிலும் தொடர்பில்லாதிருந்த தலைவர்களின் பாதையிலேயே போவதுண்டு. நம்மை எண்ணி திட்டங்களை உருவாக்கிக் கொண்டு, அது தொடர்பாகப் பிறருக்கு எதுவுமே தெரிய வராமற் பேசிக் கொண்டு, பலவாறாகவும் செயற்பட்டுக் கொண்டு நினைத்ததைச் சாதிப்பதில் குறியாக இருக்கின்றோம். இதற்காக எவரையும் காவு கொடுக்கவும் நாம் தயங்குவதில்லை. நமது சமூக அந்தஸ்து, பதவி , வயது நிலை என்ற எமக்குள்ள வளங்களைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பாதிக்கவும் நாம் தவறுவதில்லை. 'ஓநாய்கள் நடுவே வெள்ளாடுகளை அனுப்புவதுபோல' என்று யேசு உவமைப்படுத்தி அறிமுகமாக்கிய ஓநாய்களாக நாம் வாழ்ந்து வரவே செய்கின்றோம். ஓநாய்களின் நடுவே வெள்ளாடுகளின் கதி என்னவாகும் என்று அவர் நன்கே அறிவார்.
தன்மையச் சிந்தனை நம்மை வெகு நாள் வாழப்பண்ணாது. காணுகின்ற வெற்றிகள் கூட நெடுநாள் நிலைக்காது. தற்காலிகமாக நாம் காணும் வெற்றிகளை நிரந்தரம் என்று நம்பி நம் பாதையை வகுக்க முற்பட்டால் அது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகத்தான் போய்விடும். அடுத்தவர் வாழ உழைப்பதுதான் நம் ஏற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் வழியாக இருக்கும்.
அடுத்தவருக்காக வாழ்வது யேசுவின் பாதை, அதைக் கண்டு வாழ்வதே நமது கடன். நாம் வாழும் காலம் கொஞ்சமே அதில் பேர் நிலைக்க வாழவேண்டும் என்ற விருப்பு மனதில் இருக்கவேண்டும். யேசுவைப் போலவே நமது வாழ்வும் அடுத்தவருக்காக அமைகிறதா?
அடுத்தவருக்காக அமையும் வாழ்க்கை அவர்களிடமே நம்மை ஒப்படைத்து வாழும் வாழ்க்கையாகத்தான் இருக்கும்.
யேசு தாம் சீடர்களாகத் தெரிந்து கொண்டவர்களிடமும் இதைத்தான் வலியுறுத்தவும், வளர்க்கவும் விரும்பினார். அவர்களைத் தூதுரைக்க ஊரெங்கும் தேசமெங்கும் அனுப்பும்போது, வழிக்குப் பணத்தையோ, காவலுக்குக் கோலையோ கொண்டு போக வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொன்னது அவர்கள் யாருக்காக உழைக்கப்போகின்றார்களோ அவர்களிடமே தம் வாழ்வுக்குத் தங்கியிருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அப்போதுதான் அங்கே பரஸ்பர நம்பிக்கை, உறவு, ஏற்றுக் கொள்ளல் இருக்க முடியும்.
நம்மால் மற்றவர்களிடம் நம்மை ஒப்புவித்து வாழ முடியுமா? முடியும்! தூய ஆவியானவரின் அருட்கொடைகள் நமக்கு இதில் நிரம்பத் தேவை. அவர் ஒருவரே நமது நெஞ்சில் தெளிவையும் ஞானத்தையும் வைத்து நல்ல சிந்தைகளை மனதில் உருவாக்;க முடியும். அவர் ஒருவராலேயே மற்றவர் முன்னிலையில் பேச எம் நாவில் வார்த்தைகளைப் பிறப்பிக்க முடியும். அவர் தான் எமது தோள்களில் பலத்தையும் நடையில் வேகத்தையும் செயலில் உறுதியையும் தரமுடியும்.
காலம் நமக்காகக் காத்து நிற்பதில்லை. அது வரும் போகும். அதன் போக்கிலே நாம் அள்ளுண்டு போகமால் நிலைத்து நிற்க வேண்டுமானால் யேசுவைப் போல் சிந்திக்கவும், பேசவும், செயற்படவும் முனைந்து நிற்போம்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்