LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 8, 2018

பின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1

பேராசிரியர் சி.மௌனகுரு

இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை
புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற்சி இது.ஒரு நீண்ட கட்டுரை அதனால் ஐந்து பகுதிகளாக கட்டுரையை உடைத்து பதியவுள்ளேன்
ஆர்வமுடையோர் வாசியுங்கள்.
இது முதலாம் பகுதி

பின்னமைப்பியலும், பின் நவீனத்துவமும் சிந்தனையில் பெரும் மாற்றங்களைக் கொணர்ந்தன என்பது உண்மையேயாயினும் அவை யார் பக்கம் அதிகம் நிற்கின்றன என்பதைக் கொண்டே அவற்றின் தன்மைகளை மதிப்பிட வேண்டும்.
தமிழாய்வில் கூத்துப் பற்றிய ஆய்வுகள் 50களுக்குப் பின்னரிலேயே ஆரம்பமாகின்றன
. தமிழரின் கலை அடையாளங்களுள் ஒன்றாகக் கூத்து உணரப்பட்டமையும்
, அதற்குப் பின் புலமாக அமைந்த சமூக அரசியற் காரணிகளும்,
கூத்தை வளர்க்க ஆர்வலர்கள் முயற்சிகளில் இறங்கியமையும்
கூத்தாய்வுகள் எழக் காலாயின.
கூத்துப் பற்றி நடை பெற்ற ஆய்வுகளை மூன்று பிரதான பிரிவுகளுக்குள் அடக்கலாம்.
ஒன்று கூத்தைப் பற்றிய விவரண ஆய்வு
இரண்டு கூத்தை சமூகவியற் பின்னணியல் அணுகியஆய்வு
மூன்று கூத்தைச் சமூகவியற் பின்னணியில் மாத்திரமன்று அதனை ஒரு நாடக நிலை நின்றும் நோக்கிய ஆய்வு
மேற்குறிப்பிட்ட ஆய்வுகளைச் செய்தோருக்கு, நவீன காலத்தில் எழுந்த சிந்தனைகளும், தத்துவங்களும் ஆய்வு முறைகளும் பெரிதும் உதவின
. இவர்களின் ஆய்வுகள் கூத்தைப் புரிந்து கொள்வதற்கான பல வழிகளையும் திறந்து விட்டன.
இன்று
அமைப்பியல்,
பின் அமைப்பியல்,
பின் நவீனத்துவம் எனும் "புதிய" சிந்தனைகள் தமிழுக்கு அறிமுகமாகி
அவற்றின் நோக்கில் தமிழர் சமூகத்தின் பண்டைய இன்றைய இயல்புகளை விளக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன
பண்டைய இன்றைய இலக்கியங்களை மேலும் புரிந்து கொள்ளும் முயற்சிகளும் இவ் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.
இது சம்பந்தமாக வந்த எழுத்துக்களுட் பல, ஏற்புடமை இல்லாது விடினும் இம் முயற்சிகள் குறிப்பிட்ட பொருளின் பன்முகத் தன்மைகளைப் புரிந்து கொள்ள உதவுவதையும், மேலும் அது சம்பந்தமான சிந்தனைகளைத் தூண்டுவதனையும் மறுக்க முடியாது.
பின் அமைப்பியலும், பின் நவீனத்துவமும் சம காலத்தில் செல்வாக்கு மிக்க சிந்தனைகளாக எழுந்தமைக்கான காரணங்கள் உண்டு. அவற்றை முதலிற் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.முதற்காரணம்
1950 களுக்குப் பிறகு முதலாளித்துவ சமூகத்திலும், அது வளர்த்த சிந்தனைகளிலும் ஏற்பட்ட போதாமைகளாகும். முதலாளித்துவ சித்தாந்தங்களினால் உலகில் ஏற்பட்ட நெருக்கடிகளையும், மனித சிக்கல்களையும் தெளிவாக விளக்க முடியவில்லை. மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிகளும், மனிதச் சண்டைகளும் பெருகிக் கொண்டே சென்றமை,
2. இரண்டாவது காரணம்
முதலாளித்துவத்தை எதிர்த்து எழுந்த சோசலிச அரசான ரஷ்யாவும் அது கட்டி எழுப்பிய சம தர்ம தத்துவங்களும் மனித குலம் எதிர் நோக்கிய நெருக்கடிகளையும், பிரச்சனைகளையும், தீர்க்கத் தவறியதுடன், சோவியத் சோசலிஸக் குடியரசு சிதறிப் போனமை.
3. மூன்றாவது காரணம்
முதலாளித்துவத் தினதும் விஞ்ஞான வளச்சியினதும் அபரித வளர்ச்சியால் ஏற்பட்ட பூகோள மயமாதற் கொள்கையும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும் ஆகும்
. "உலக ஆதிக்கம் அமெரிக்காவிடம் இல்லை, அங்குள்ள ஒரு சில கம்பனிகளின் கைகளிலேயே உள்ளன. இப் பூகோள மயமாக்கம் நாடுகளின்,இனங்களின் தனிமனிதர்களின், தனித்துவங்களை இழக்க வைக்கின்றது. அடையாளங்களை நாசம் பண்ணுகின்றது. செயற்கையான ஒரு கலாசாரத்தை மக்கள் மீது திணிக்கின்றது. எப்படி இதனை எதிர் கொள்ளலாம்”
என்ற திகைப்பு அறிஞரிடம் தோன்றியமை.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட தத்துவங்களும், நிலவிய சிந்தனைகளும், முறையியல்களும் மனித குலம் எதிர் கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்களையும், பிரச்சனைகளையும் புரிந்து கொள்ளப் போதுமானவையாக இல்லை என்று கண்ட சில சிந்தனையாளர்கள் தத்தம் துறைகளிலே சில சிந்தனைகளை முன் வைத்தனர்.
மொழியியல்,
மானிடவியல் ,
உளப்பகுப்பாய்வியல்
போன்ற துறைகளிலீடுபட்டுழைத்த அறிஞர்கள் பலர் முன் வைத்த கருத்துக்களின் திரட்சியே
அமைப்பியல்,
பின் அமைப்பியல்,
பின் நவீனத்துவ சிந்தனைகளாகப்
பின்னர் இனம் காணப்பட்டன.
பின் நவீனத்துவம்,
நவீனத்துவத்தை விமர்சனம் செய்யும் சிந்தனா முறையாகும்.
அமைப்பியல்,
பின் அமைப்பியலுடன் இது இணைந்தும், பிணைந்துமுள்ள அதே வேளை தனக்கெனத் தனித்துவங்களையும் கொண்டுள்ளது.
இதனை ஒரு தத்துவம் எனப் பின் நவீனத்துவ வாதிகள் உரிமை கொண்டாடாவிடினும் அதனை ஒரு தத்துவமாகப் பார்த்து விமர்சிக்கும் போக்கும் உண்டு.
பின் நவீனத்துவம் பற்றி அறிமுகம் செய்பவர்கள் அதனைப் பின்வருமாறு விளக்குவர்.
1. கடந்த காலத்தை முற்றாக உடைத்து நொறுக்கிவிட்டுப் புதிதாய் வருகிறது.
2. கடந்த காலத்திலுள்ள எல்லாத் தத்துவங்களையும் விமர்சனம்செய்து தலை கீழாக்குகிறது.
3. இது வரையிலான எல்லாப் பெருங்கதை யாடல்களின் தகர்வை அறிமுகம் செய்கிறது.
பின் நவீனத்துவம் நிராகரிக்கின்ற கருத்துக்கள்.
பொதுமைப்படுத்தல்
சாராம்சவாதம்
மொத்தத்துவம்
அடித்தள வாதம்
வரலாற்று வாதம்
பகுத்தறிவின் பயங்கரம்
தர்க்கத்தின் வன்முறை
பின் நவீனத்துவம் முன் மொழிகின்ற கருத்துக்கள்.
சிதறுதல்
பன்மைத் தன்மை
மற்றது
கருத்து விலகல்
வித்தியாசம்
கட்டுடைத்தல்
பின் நவீனத்துவம் தனக்குரிய தத்துவ ஊற்றுக்களை
காண்ட்,
நியட்சே
சிக்மண்ட்பிரய்ட்
ஆகியோரிலிருந்து பெற்றுக் கொண்டதென்றும்
இவர்கள் அனைவரும் கருத்துக்களின் மீது சமூகம் வகிக்கும் தாக்கத்தினையும், பொருளின் (ஜடம்) இருப்பையும் பெரிதுபடுத்தாத கருத்து முதல்வாதிகளென்றும்
பின் நவீனத்துவம் இவ்வகையில் மாயாவாதம் (ஒன்றும் இல்லை) என்கிற கருத்து முதல்வாதத்தை முன் வைத்து மக்களையும் அறிஞர்களையும் குழப்புகிறது என்றும்
அதன் மூலம் இச் சிந்தனை மரபு அழிந்து கொண்டு போகும் முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுக்க வந்த சிந்தனை மரபு என்றும் காரசாரமான வாதத்தினை இதற்கு எதிராகப் பலர் முன்வைக்கின்றனர்.
அமைப்பியல் வாத
பின் அமைப்பியல் வாதச்
சிந்தனைகளை பொருள் முதல் வாதத் தத்துவமான மாக்ஸியத்துடன் இயைபுபடுத்தி புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்த பிராங்பேர்ட் சிந்தனைப் பள்ளியினரும்,

அல்தூசர்,
அன்டோனியோகுறோம்சி,
பெஞ்சமின்பிராங்கிளின்,
போன்ற மாக்ஸியர்களின் சிந்தனை முறைகளையும்
நாம் மறந்து விடலாகாது.
பின் அமைப்பியல் ,
பின் நவீனத்துவ சிந்தனை முறை
ஐரோப்பாவிலே ஒரு சிந்தனை மரபாகவும்
அமெரிக்காவிலே ஒரு பண்பாட்டு நிலையாகவும்
நிலவுகின்றது.
இச் சிந்தனைகள் சம காலத்தில் கீழை நாடுகளுக்கு அறிமுகமாகின. காலனித்துவத்திலிருந்து ஓரளவு விடுபட்ட நிலையிலும், காலனித்துவ சிந்தனைகளினின்றும் விடுபடாத நிலையிலும், அதாவது பின் காலனித்துவ சிந்தனைகளுடன் தான் கீழைத்தேயம் இச் சிந்தனை முறைகளை உள்வாங்குகிறது என்பதை மறந்து விடலாகாது.
தமிழிலே சிறு பத்திரிகைக்காரர்களால் இச் சிந்தனை முறை முன் வைக்கப்படுகின்றது. மாக்ஸியத்திற்கு எதிரான போக்கினர் ஆரம்பத்தில் இதனை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
பின்னர் மாக்ஸிஸவாதிகளான
எஸ்.வி.ராஜதுரை,
தமிழவன்,
அ.மார்க்ஸ்
போன்றோர்
அல்துTசர்,
அன்டோனியோ குறோம்சி
ஆகியோரைப் பின்பற்றி தமிழுக்கு இதனை அறிமுகம் செய்தனர்.
இவற்றை அறிமுகம் செய்ததிலும் வாதப் பிரதிவாதங்களை நடத்தியதிலும் பல போதாமைகளும், குழப்பங்களும் உள்ளன என்பது பலர் கருத்து.
இன்று இவ்விவாதம் படித்த குறுங் குழுவினரிடையே முக்கிய விவாதமாகவும்,
ஏற்கனவே நான் கூறிய படி தமிழர் சமூகத்தையும் அதன் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை அலசும் சிந்தனையாகவும் பிரதானம் பெற்று வருகின்றது.
இங்கு நான்
பின் அமைப்பியல், பின் நவீனத் துவ சிந்தனையாளர்களில்
பிரதானமானவர்களான
மிஸல் பூக்கோ,
ழாக் தெரிதா,
ரோலன்பார்த்,
லியோதார்ட்,
ஆகியோரின் கருத்துக்களினடிப்படையில் கூத்தின் அளிக்கை முறையினை விளங்கிக் கொள்ள முயலுகின்றேன்.
மிகயில் பூக்கோ (1926-1984) பிரஞ்சுக் கலைக் கழகத்தின் பேராசிரியராக இருந்தவர்; தத்துவஞானி; சமூகவிஞ்ஞானி; கருத்துக்களின் வரலாற்றாசிரியர். இவர் கருத்துக்களில் அமைப்பியல், பின் அமைப்பியல். Madness and Civilization, History of Sexuality, Archaeology of Knowledge.என்பன இவர் எழுதிய முக்கிய நூல்கள்
பூக்கோவின் சிந்தனைகளை மையமாக வைத்து

முந்திய பூக்கோ, பிந்திய பூக்கோ எனப் பிரிப்பர்.
முந்திய பூக்கோ அல்தூசரின் கருத்துக்களின் செல்வாக்கிற்குட்பட்ட மாக்ஸியவாதியாக இருந்தார்.
பிந்திய பூக்கோ நியட்சேயின் கருத்துக்களுக்குட்பட்டு மாக்ஸிய விமர்சனக் கருத்துக்களை முன் வைத்தார்.
முந்திய காலப் பூக்கோ அறிவினை முதன்மைப் படுத்தினார்.
பிந்திய காலப் பூக்கோ அறிவைக் காட்டிலும் அதிகாரம் (power) என்பதனை முதன்மைப் படுத்துகிறார்.
இவரது முக்கிய கருத்துக்களுள் ஒன்று
"எல்லா மானிட செயற்பாடுகளையும் நிர்ணயிப்பது ஆதிக்கத்திற்கான போட்டியே”
என்பதாகும்.
மேலாதிக்கத் தொடர்புகளால் மனிதர் கட்டுப் படுத்தப்பட்டுள்ளனர் என்றும்
சமூக யதார்த்தத்தின் அடிப்படைத் தத்துவமே மேலாதிக்கம் என்றும்
பூகோ கூறினார்.
மேலாதிக்கம் அறிவினால் தோற்றுவிக்கப்படுவதில்லை. எனினும் அறிவின்றி மேலாதிக்கத்தை செயற்படுத்துவது சாத்தியமில்லை என்பர் பூகோ.
அறிவே ஆதிக்கமாகச் செயற்படுவதாகக் கூறி அறிவின் ஆதிக்கத்தை விமர்சனம் செய்வர் பின் நவீனத்துவ வாதிகள்.
அறிவு,
நிறுவனக் கட்டுப்பாடுகள்,
இருப்பதை விதிக்குட்படுத்தல்
என்பவற்றோடு
நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது என்பது பூகோவின் வாதம்.
முடியாது என்ற சொல்லும்,
அதிகாரமும்,
தடையாணையிடும் வல்லமையும்
ஆதிக்கத்தின் மேலாண்மையின் உரிமைகளாகும்.
ஆனால் இந்த ஆதிக்கத்திற்குச் சவாலாக இருத்தல் ஒரு மீறலாகவும் பூகோவினால் கருதப்பட்டது.
ஆதிக்கம் என்ற கருத்துருவை சமூகத்திற்கு மாத்திரமின்றி உடலுக்கும் பொருத்திப் பார்க்கிறார் பூகோ,
இக்கருத்துக்களை இவர் சிக்மண்ட்பிராய்டிடம் இருந்து பெற்றுக் கொள்ளுகிறார்.
பிராய்டுக்குப் பிறகு உளப் பகுப்பாய்வு பற்றி நிறையக் கருத்துக்கள் வந்து விட்டன. இவையெல்லாம் பூகோவைப் பொறுத்தளவில் சமூக ஆதிக்கத்தின் கையில் மனிதர்கள் எவ்வாறு அகப்படுகிறார்கள் என்பதற்கான சான்றுகள் தான்.
உளப் பகுப்பாய்வில்
மனிதர்கள், சமூக ஆதிக்கச் சக்திகளோடு ஒத்துழைக்கின்ற,
தானாக ஒப்புக் கொள்கின்ற,
ஒருங்குசேர்ந்து விடுகின்ற தன்மைகள் வெளிப்பட்டன.
அரசியலை இந்தப் பின்னணியில்தான் உடலின் ஆதிக்க சக்தி உடல் மீதான எல்லா ஆதிக்கங்களையும் எதிர்க்கிறது என்ற கருத்தை முன் வைக்கிறார் பூகோ.
உடலின் ஆதிக்கம்,
உடல் மீதான ஆதிக்கம்
இரண்டுமே அரசியல்தான்.
தனி மனித உறவுகளையும், தந்தை பிள்ளை உறவையும், பாலியல் உறவுகளையும், அரசியல் பாதிக்கிறது. அது போல உடலாதிக்கமும் அரசியலைப் பாதிக்கிறது.
உடலின் ஆதிக்கத்தை ஆதிக்க - அதிகாரத்தினையும், அதிகாரம் சார்ந்த அறிவினையும் எதிர்க்கப் பயன்படுத்த இயலும் என்பது பூகோவின் கருத்து.
பூக்கோ தனது நூல்கள் வாயிலாக மிக அழுத்தமான வன் முறைப் பண்பு கொண்ட மேற்கத்தைய சிந்தனைகள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
Madness and Civilization என்ற அவரது நூல் பைத்தியம் என்று கருதப்பட்டவர்களை மேற்கத்தைய சமுதாயம் எப்படி நடத்தியது என்ற கணக்கெடுப்பு வரலாறுதான்.
உளப் பிறள்வு உடையவர்களைச் சிறைப்படுத்தல்,
நிறுவனக் கட்டுப்பாட்டிற்குட்படுத்தல்
ஆகியவற்றிற்கான உத்தி முறைகள் மத்திய காலம் முதல் வளர்ந்து வந்துள்ள வரவாற்றைக் கூறும் நூல் இது.
இதன் உட்பொருள் ஆதிக்க தர்க்க அறிவை, அதன் விலங்கியல் பை, மற்றையதிலிருந்து வேறுபடுத்திப் பிரிக்கின்ற ஒடுக்குமுறைத் திட்டத்தினை எதிர்ப்பது தான். இதனை ஒரு அறிவார்ந்த சவால் நூல் என்பர்.
மத்திய காலத்தின் முடிவில் பைத்தியம் எனும் நோய் பெரும் இடத்தைப் பிடிக்கிறது. இவர்கள் மன நோயாளர்கள் எனக் கருதிக் கடுமையாகக் கண்காணிக்கப் படுகின்றனர். ஒழுக்கத்தின் பெயரால் பித்தர்கள
வதைக்கப்பட்டனர். சிறைப்படுத்தப்பட்டனர். பித்து நிலையிலே ஞானங்கள் பிறக்கும்.
பகுத்தறிவு வாதம் பித்தர்களை ஒதுக்கியமையினால் பித்து நிலையாளாளர்களின் ஞானத்தை இழந்து விட்டோம்
என்று வாதிடுகிறார் பூக்கோ.
அர்த்தோ (நாடகம்)
, வன்கோ,(ஓவியம்),
சல்வடோர் டார்லி (ஓவியம்),
நியட்சே (தத்துவம்),
ஆகியோர் பைத்திய நிலை பெற்று தம் ஞானத்தை வழங்கியவர்களாவர் என்பது பூகோவின் வாதம்.
தமிழில் சித்தர்கள் மரபையும், தமிழ்ச் சிந்தனை மரபையும் இப் பின்னணியில் நோக்கலாம். சிவனையே பித்தன் என்று கூறிய இந்து மரபும் இப் பின்னணியில் நோக்கத் தக்கதே
பூக்கோ ஆதிக்கத்தினால் ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட குழுக்கள் சார்பில் வாதிட்டார். இதிலிருந்து தான் விழிம்பு நிலை மக்கள் பற்றிய பார்வைகள் உருவாகின
.
இவ்வகையில் அதிகார மேலாண்மை,
அறிவு அதற்குத் துணை போதல்,
அதனை எதிர்க்கும், விழிம்பு நிலை மக்கள்
என்ற கருத்துக்களை பூக்கோ முன் வைத்தார்
.
கூத்து அளிக்கை முறைமைக்கு நாம் பூக்கோவின் சிந்தனைகளைப் பொருத்திப் பார்ப்போம்.
கூத்து ஒரு நிகழ் கலையாகும்.
கூத்திற்கென ஒரு பாட உரு (Script) இருப்பினும் நிகழ்த்துகையில் தான் அதன் முழுப் பொலிவும் தெரிகிறது.
பாட உருவில் இல்லாத பல விடயங்கள் நிகழ்த்தும் போது வெளி வருகின்றன.
அவ் வண்ணம் வெளி வரும் விடயங்களில் முக்கியமான ஒரு விடயம் அதிகாரமும் அதிகாரத்திற்கு எதிரான குரலும்தான்.
வெளிப்படையாக இது தெரியாவிடினும் கட்டுடைத்துப் பார்க்கையில் இது தெளிவாகப் புலனாகும்.
( தொடரும் )


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7