1
தற்போது இலங்கையில் ஏற்பட்டிருப்பது அரசியல் நெருக்கடியும், அரசமைப்பு நெருக்கடியும் ஒருங்கிணைந்த ஒருவித "வெறிக்கடி" என்கின்றனர் அரசியல் ஞானிகள்.
ஒட்டு மொத்த அரசமைப்பு முறை மாற்றம் ஒன்றின் மூலம் நாட்டு மக்களின் நலன்களும், மாற்றக் காலத்தில் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பெருந்தேசியக் கட்சியின் தலைவரின் நலனும் சமாந்தரமாக அமையும் வகையில் மாற்றம் அமைந்திருந்ததை இலங்கையின் வரலாற்றில் காண்கிறோம்.மேலும் இவ்வாறான அரசமைப்பு மாற்றம் சிறுபான்மை மக்களுக்கு முந்தைய யாப்பில் இருந்து வந்த மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தையும், சில சலுகைகளையும் இல்லாதொழிக்கும் பிரமாணங்களையும் கொண்டிருந்தமை தெளிவான உண்மையாகும். இத்தோடு மாற்றக் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பெருந்தேசியக் கட்சியையும் அதன் தலைமைத்துவத்தையும் நலிவடையச் செய்யும் வகையிலும் அரசமைப்பு மாற்றங்கள் அமைந்திருந்தன என்பதும் இலங்கையர்களின் அனுபவமாகும்.
ஆனால் வரலாற்றில் நிகழ்ந்த எந்தவொரு அரசமைப்புத் திருத்தங்களும் மக்கள் நலனையோ அல்லது நாட்டு நலனையோ முன்னிறுத்தி இடம்பெற்றதாக எந்த ஆதாரங்களும் இல்லை. மாறாக, அவ்வக் காலங்களில் பதவி வகித்த பெருந்தேசியக் கட்சிகளின் நாட்டை ஆளும் சிங்களத் தலைவர்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவும், அவர்களின் நலனைப் பேணவும்,தேர்தலைக் கையாளவும் மாத்திரமே திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
மஹிந்த ராஜபக்ச அவரின் தனி அரசியல் நலனை முன்னிறுத்திக் கொண்டுவந்த18 ஆவது திருத்தமும், ரணில் விக்கிரமசிங்க மைத்திரியின் கண்ணைப் பொத்தியடித்து அவரின் அதிகார நலனை முன்னிறுத்திக் கொண்டு வந்த 19 ஆவது திருத்தமும் அண்மையில் நமக்குக் கிடைத்த அரசமைப்புத் திருத்தங்களின் சுய நல நோக்கங்களை அறிந்து கொள்வதற்கான பிந்திய உதாரணங்களாகும்.
இவ்வாறான அரசியல் தலைவர்களின் சுய நலன் சார்ந்த அரசமைப்புத் திருத்தங்களை வைத்துக் கொண்டே நாட்டின் அரசமைப்பு மீறப்பட்டதாகவும், ஜனநாயகம் கொல்லப்பட்டுள்ளதாகவும்,மக்களி ன் விருப்பு குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டதாகவும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.மக்களின் விருப்பமும்,ஜனநாயகமும் மீளவும் நிரூபிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதையே மஹிந்தவின் பிரதமர் நியமனம் நாட்டுக்கு தெரிவிக்கிறது.பெருந்தேசியத் தலைவர்களான மைத்திரி, மஹிந்த மற்றும் ரணில் ஆகியோருக்கிடையிலான அதிகாரப் போட்டி மக்களின் அதிகாரத்தை மீண்டும் நிறுவ வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
32 ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் வரைத் தமிழர்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடிய, 1972 இல் இருந்து முஸ்லிம்களின் மத, வணிக மற்றும் சுதந்திரமாக வாழும் உரிமைகளை வன்முறைகள் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய இலங்கையின் ஜனநாயகத்தின் பெயரிலான சர்வாதிகாரத்தை இத்தருணத்தில் மறப்பதும் - மறுப்பதும் இனி இப்படி நிகழாது என்று நம்புவதும், நம்பவைப்பதும் சந்தர்ப்பவாதக் கோழைத்தனம் மட்டுமல்ல வக்கற்ற 'வக்காலத்துவமும்' ஆகும்.
2
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது குறை நிறைவேற்று அதிகாரத்தைதப் பாவித்து நாடாளுமன்ற அதிகாரத்தை கீழிறக்கியுள்ளார். இப்போது இவ்வதிகாரம் எவரிடமுமில்லை. அது மாய உலகுக்குள் பிரவேசித்துள்ளது.தற்போது இருக்கும் ஒரே அதிகாரம் குறை நிறைவேற்று அதிகாரம் மட்டுமேயாகும்.மைத்திரிக்கு வாசியான இந்த அதிகாரத்தை அவர் தக்கவைப்பதற்கே மஹிந்தவை பாவித்துள்ளார். இதன் மூலம் தனது அதிகாரத்தைப் பலப்படுத்த முடியும் என நம்பி மஹிந்த, மைத்திரியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துப் போயுள்ளார்.
2010 இல் தனக்கு பிரதமர் என்ற அந்தஸ்த்து கிடைத்திருக்க வேண்டும் என்பது மைத்திரியின் நம்பிக்கை. அது கட்சியில் வலது குறைந்த ஒருவருக்குப் போனதும் அவர் பேசாதிருந்தார். ஆனால் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான தனக்கு வரவேண்டிய தீர்மானிக்கும் சக்தியின் கணிசமான பங்கு பசில் ராஜபக்சவுக்குச் சென்றதை மைத்திரி விரும்பவில்லை.ஆகவே பசிலுக்கும் மைத்திரிக்குமான பனிப்போர் தொடங்கிற்று. அன்வர் இஸ்மாயிலின் மரணத்தினால் ஏற்பட்ட தேசியப்பட்டியல் வெற்றிடத்துக்கு பசில் ராஜபக்சவை நியமிப்பதற்கு ஒத்துக்கொள்ள வேண்டாம் என்று அதாவுல்லாஹ்வை மைத்திரி கேட்டுக்கொண்டார். ஆனால் அதா பசிலை நியமிக்க ஒத்துக்கொண்டார். இதனால் மைத்திரியின் விருப்பம் மலையேறியது.மைத்திரி ஒருபோதும் மஹிந்தவை வெறுத்தவரல்ல, அவர் வெறுத்ததெல்லாம் பசில் கட்சியிலும்,ஆட்சியிலும் கொண்டிருந்த இறுக்கமான பிடியைத்தான் என்பதை அறிதல் முக்கியமாகும்.
ஆகவே, மைத்திரி ராஜபக்ச குடும்பத்துக்கு பாடம் படிப்பிக்கும் வகையிலமைத்த, தான் விரும்பிய அதிகாரத்தைப் பெறுவதற்கான வியூகத்தில் ரணில் மாட்டினார். தான் விரும்பிய அதிகாரத்தை அடைந்துகொள்ளும் வகையில் மஹிந்தவைத் தோற்கடிக்க ரணில் வகுத்த வியூகத்தில் மைத்திரி அகப்பட்டார்.இந்தப் பரஸ்பரக் கூண்டுக் கிளி வியூகத்தின் தோல்வியே இன்றைய அரசியல் நெருக்கடியாகும்.இந்நெருக்கடியி ன் காரணத்தால் நாடாளுமன்ற அதிகாரத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் புதிய பேரதிகாரம் தோற்றம் பெற்றுள்ளது. இது முப்படைகள் மற்றும் பொலிஸ் பெற்றிருக்கும் அதிகாரமாகும்.நாடாளுமன்ற அதிகாரம் செயலிழந்திருக்கும் இவ்வேளையில் இந்த ஆயுத விசை மக்களுக்கும், பலம் பொருந்திய அந்நிய படைகளுக்கும் மட்டுமே அச்சப்படும் என்பது இயற்கை விதியாகும். மக்கள் மஹிந்தவுடன் இருக்கிறார்கள் என்பதும்,ரணில் பலமான வெளிநாட்டு சக்திகளுடன் இருகிறார் என்பதும்,மைத்திரியின் அதிகாரம் மக்களோடு இருக்கும் மஹிந்தவுடன் இணைந்து நிறைவேற்றும் தகுதியுடன் இருக்கிறது என்பதும் ஆயுத விசை உட்பட அனைவருக்கும் தெரியும். இந்த நிலைமையை ஹக்கீம் உணர்ந்ததன் நிமித்தமாகவே அவர் அலரி மாளிகையில் வைத்து ஊடகங்களுடன் பேசிய போது முப்படைகள் மற்றும் 'பொலிஸ் படையின்' நடு நிலையைக் கோரினார்.
3
மேற் குறித்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் தகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளுக்கும் உண்டு. இவை இணைந்தோ அல்லது இரண்டாகப் பிரிந்த நிலையிலோ எடுக்கும் ஆதரவளிக்கும் அல்லது எதிர்க்கும் தீர்மானம் நாடாளுமன்ற அதிகாரம் யாருக்குள்ளது என்று நிரூபிக்கக் கூடியதாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தர் ஒரு ஊடக சந்திப்பினூடாக நாங்கள் இந்த நெருக்கடியில் எவர் பக்கமும் சாய விரும்பவில்லை, நடு நிலையாக இருக்கவே விரும்புகிறோம் என்று கூறினால் மைத்திரி- மஹிந்த வெற்றியடைவர். ஐ.தே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மறுபுறத்தில் இணைவர். நாங்கள் ரணிலின் பக்கம் ஆதரவு வழங்குவோம் என்று பிரகடனப்படுத்தினால், ஐ.தே கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுபுறம் இணைவது தடைப்படும், ரணில் வெல்வார்.
முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் நாங்கள் மைத்திரி- மஹிந்த பக்கம் ஆதரவளிக்கிறோம் என்று பகிரங்கமாகக் கூறினாலும் ஆட்சியதிகாரம் புதிய அரசாங்கத்தின் பக்கம் உறுதியாகும். இவ்வேளையில் தமிழ்த் தேசியம் நடு நிலை வகிப்பதாகக் கூறுவது முஸ்லிம் தேசியம் பக்கம் சார்வதாகக் கூறுவதற்கு சமமானதாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் 1994 க்குப் பின்பு எப்போதும் ஆளுங்கட்சியுடன் சேர்ந்திருக்க விரும்பினாலும், பல தடவைகள் அதிகார நுகத்தடியில் கட்டப்பட்டிருந்தாலும் நெருக்கடியில் இருந்து மீண்ட வரலாற்றைக் கொண்ட மக்கள் மனதில் ஒரு கட்சியாக உட்கார்ந்திருக்கும் அமைப்பாகும்.
இந்த தேசிய இழுபறி அரசியலில் வெற்றி யார் பக்கம் என்று தீர்மானத்தை எட்ட முடியுமான தருணத்தில் மக்கள் காங்கிரஸ் வெல்லும் பக்கத்தோடு சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகப் பேசப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ், 1994 க்குப் பின்னர் பல தடவைகள் ஆளுங்கட்சியில் அங்கம் வகித்திருந்தாலும்,
நெருக்கடிகளில் இருந்து வழுவி ஓடிய அனுபவத்தை அதிகமாகச் சந்தித்த கட்சியாகும்.உட்கட்சிப் போராட்டத்தையும் இக்கட்சி அதிகம் சந்தித்து இழப்புகளை எதிர்கொண்ட போதும் தூர்ந்து போகாமல் இருப்பதற்கு இது நிரந்தரமாக முஸ்லிம் மக்கள் கொஞ்சப்பேரின் மனதில் சம்மணமிட்டு அமர்ந்திருப்பது காரணமாகும். எனவே, மு.கா எதிர்க்கட்சியில் இருந்தாலும் தாக்குப் பிடிக்கும் தன்மையுடையதாகும்.
நாட்டின் அரசமைப்பு மீறல், சர்வாதிகார அதிகாரம் பற்றி இன்று பேசப்படுகிறது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் தற்போதைய தலைவர்களைக் கட்சிச் சர்வாதிகாரிகளாக உருவாக்குவதற்காகவும் அவர்களின் பிடியில் இருந்து கட்சி நழுவி விடாமல் இருப்பதற்காகவும் இக்கட்சிகளின் யாப்புகள் கிறுக்குத் தனமாக மாற்றியமைக்கப்பட்டதையும் இவ்விடத்தில் ஜனநாயகப் போராளிகள் நினைவுகூறல் வேண்டும்.
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு மஹிந்தவின் கொள்கைக்கமைவாக அதிலிருந்த முஸ்லிம் என்ற வார்த்தையை நீக்கி அகில இலங்கை மக்கள் காங்கிரசாக மாற்றம் பெற்றிருக்கும் றிஷாட் பதியுத்தீன் அவர்களது அமைப்பு, பிரமுகர்களை விசேடமாக முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகிய மற்றும் விலக்கப்பட்ட அரசியல் பிரமுகர்களை இணைத்ததனால் கணிசமான வாக்குகளைத் தன்னகத்தே வைத்திருக்கும் கட்சியாகும்.இக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை எதிர்க்கட்சியாக இருந்த அனுபவம் அதற்கில்லை.தலைவர் அமைச்சராக இல்லாவிட்டால் எத்தனை பிரமுகர்கள் கட்சியில் இருப்பார்கள் என்று கணக்கிட்டு எண்ணித் துணிய இக்கட்சிக்கு ஒரு வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சியாக இருப்பதில் இக்கட்சி விருப்பம் காட்டாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குணவியலில் ஒற்றைத் தன்மையுடையது என்ற முத்திரையும் முகத்திரையும் தற்போது அழிந்துவிட்டது. முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் புதிய கட்சிப் பிரகடனத்தின் பின்பும், ஈ. பீ. ஆர். எல்.எப் இன் வெளியேற்றத்தின் பின்னரும், புளொட் மற்றும் ரெலோவின் தடுமாற்றங்களை ஒட்டியும் இம்முடிவுக்கு வரவேண்டியுள்ளது. ஆகவே, இன்றைய மத்திய அரசியலில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தில் தமிழ்த்தேசிய அரசியலின் வகிபாகம் உறுதியற்றதாக ஆகியுள்ளது. அமைப்பை அமைப்பு விஞ்சும் வியத்தகு வியூகத்தை எதிர்பார்க்கலாம். இவ்வாறே முஸ்லிம் கட்சிகளின் வியூகம் ஆளையாள் விஞ்சி விளையாடும் வகையில் அமையலாம்.இந்த விளையாட்டு கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போதும் நடந்தது என்பதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். அன்று முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்த மைத்திரி வென்றதனால் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு ஓரளவுக்கு உத்தரவாதம் கிடைத்தது. இல்லையாயின் குடம் உடைந்த கதை அரங்கேறியிருக்கும். பின்னரான காலத்தில் முஸ்லிம் சமூகப் பாதுகாப்பில் அலுமீனியப் பானை நசுங்கிய கதை நிகழ்ந்தது என்பதை யாவரும் அறிவோம்.
எதிர்காலத் தேர்தல்களில் சிங்கள மக்களின் அதிக ஆதரவைப் பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்தால் இக்கட்சிகளின் கூட்டு அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதை முஸ்லிம் கட்சிகள் கட்டாயம் கணக்கில் எடுக்கும். மஹிந்த நாடாளுமன்றில் தோல்வியடைந்தாலும் அவருடன் இணையும் முஸ்லிம் கட்சிகள் ஒரு வருடத்துக்குத்தான் எதிர்க்கட்சியில் இருக்கவேண்டிவரும். இது தாக்குப்பிடிக்கக்கூடிய காலம்தான். ஆனால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின் இக்கட்சிகளுக்கு ஆசனம் குறைவது மட்டுமன்றி ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சியில் அமரவேண்டியும் ஏற்படும். ஐந்து வருடங்களுக்கு முஸ்லிம் கட்சித் தலைமைகள் தாக்குப் பிடிக்கமாட்டாது. இதனையும் இவர்கள் கணக்கிலெடுப்பார்கள்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்ற 45 இலட்சம் வாக்குகளையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி பெற்ற 13 இலட்சம் வாக்குகளையும் சேர்த்தால் இக்கட்சிகள் 58 இலட்சம் வாக்குகளைக் கொண்டிருக்கின்றன.
இவ்விரு கட்சிகளும் இறுதியாக நடந்தேறிய தேர்தலில் அதிக மக்களின் ஆணையையும், இனிவரும் தேர்தல்களில் வெற்றி இலக்கையும் அடையும் தகுதியுடைய கட்சிகள் என்பதை இவ்வாக்கு எண்ணிக்கைகள் நிரூபிக்கின்றன. இவை இரண்டறக் கலந்து இணைந்திருப்பதையும், இக்கட்சிகளின் பிரதானிகள் ஜனாதிபதியாகவும், பிரதமாராகவும் அதிகாரத்தில் உள்ளார்கள் என்பதையும் முஸ்லிம் கட்சிகள் கவனத்தில் எடுத்து தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
4
ரணில் விக்கிரமசிங்க இரண்டு வியூகங்களை அமைத்து செயல்படுவது போல் தெரிகிறது. ஒன்று எது நடந்தாலும் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கான தயாரிப்பு வேலையாக மக்களின் அனுதாபத்தைப் பெறும் நடவடிக்கைகளைச் செய்கிறார்.தாராளவாதிகளின் ஆதரவுத் தளத்தை மட்டும் தன்னகத்தே கொண்ட ரணில்,அனுதாப அலையைப் பெறும் நோக்கில்தான் கொழும்பில் சாதாரண மக்களை அணி திரட்டி ஆர்ப்பாட்டப் பேரணியை நடாத்தி முழு நாட்டுக்கும் செய்தியை அனுப்பியுள்ளார். முதலில் ஜனாதிபதித் தேர்தல் இடம் பெற்றால், இதில் ஏற்படும் தோல்வி அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகக்குறைந்த ஆசனங்கள் கிடைக்கவே வழிவகுக்கும் என்பதால் முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதே ரணிலுக்கு ஆறுதலாக அமையும்.
மஹிந்தவுக்கும் நாடாளுமன்றத் தேர்தலே முதலில் வரவேண்டும். இவ்வாறெனிலே தான் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றாலும், 2/3 பெரும்பான்மையை அவர் பெறுவதற்கு மேலதிகமாகத் தேவைப்படும் உறுப்பினர்களை சலுகைகளை வழங்கி எடுத்து 19 ஆவது திருத்தத்தை வலுவிழக்கச் செய்யலாம். இதன் பின் அவர் மூன்றாவது முறையும் அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்திக்கொள்ள முடியும். இதுமட்டுமல்லாது வரையறையற்ற எண்ணிக்கையில் அமைச்சர்களையும் நியமிக்க முடியும்.ஆகவே, நாடாளுமன்றைக் கலைக்கும் பிரேரணை ஒன்றுக்காக ரணிலும், மஹிந்தவும் கை கோர்க்கமாட்டார்கள் என்று கூறவும் முடியாது.
அன்று பிரிந்து நின்ற மைத்திரியும் மஹிந்தவும் இன்று இணைந்து பரஸ்பர அனுகூலங்களைப் பெறுகின்றனர். தனி நலன்களினடிப்படையில் என்றுமே பரஸ்பரம் உதவிகளைக் கொடுத்தும், பெற்றும் வந்த ரணிலும் மஹிந்தவும் இன்றும் ஒத்து ஓடவும் கூடும். ஒன்று மட்டும் நிச்சயம் அதிகாரம் முழுமையாக மஹிந்தவின் கைக்கு வந்தால் ரணிலின் கட்சித் தலைமையை எவரும் பறிக்க முடியாது.ரணிலின் தலைமைக்கு எதிரான எந்தவொரு உட்கட்சி "சதியையும் அல்லது ஜனநாயக முயற்சியையும்" மஹிந்த முறியடிப்பார்.
ரணிலின் இரண்டாவது வியூகம், மேற்குலக அரசுகளின் ஆதரவுடன் புதிய அரசை நிலை குலைய வைப்பதற்கு, இலங்கையின் திடகாத்திரத்தை தற்காலிகமாக நொருக்கிவிடுவதாகும். இதற்கான வாய்ப்பு எந்தளவுக்கு அமையும் என்று கணிப்பிடுவது கடினமாக உள்ளது. உள்நாட்டு நெருக்கடி மிகத் தீவிரமாக வெகு மக்களைத் தாக்கத் தொடங்காமல் வெளிநாடுகளின் தலையீடு அவசரமாக இடம்பெற வாய்ப்புகளில்லை. ஜேர்மனி ஐந்து மாதங்களாக ஒரு அரசை உருவாக்க முடியாமல் தடுமாறிய போதும், பெல்ஜியத்தில் இரண்டு வருடங்களாக அரசாங்கம் இல்லாதிருந்த நிலையிலும், நீண்டகாலமாக வட அயர்லாந்தில் அரசாங்கம் ஒன்று இல்லாதிருந்த போதும் அங்கெல்லாம் மேற்குலகால் உள்நுழைய முடியவில்லை.
ரணில் மேடையில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். அதில் ஏற முதலில் முயல்கிறார் முடியாவிட்டால் மேடை அமைந்திருக்கும் மைதானத்திற்குள் இறங்குவார். அங்கும் கணிசமான கரகோசம் கிடைக்காது போனால் எங்குதான் செல்வார் தனது ஊரைத் தவிர? அவரது ஊர் கட்சியாகும். ஊரிலிருந்தும் விரட்டப்படாதிருக்க 18 ஊர்களின் அதிபதி பண்ணையாரின் உதவி தேவையல்லவா?
றவூப் ஹக்கீம் அவர்களைப் பொறுத்த வரை நாடாளுமன்றத் தேர்தல் முன்பே நடைபெறுவது சிக்கலை ஏற்படுத்தும். கண்டியில் ஐக்கிய தேசியக் கட்சியிலன்றி வேறெந்தக் கட்சியிலும் போட்டியிட்டு அவரால் வெல்ல முடியாது, அதுவும் அக்கட்சியில் மூன்றாவது முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாத பட்சத்தில்தான் அவரது வெற்றியை உறுதிப்படுத்த முடியும். ஏனெனில் கண்டி முஸ்லிம்கள் சூழ்நிலை கருதி சிங்கள வேட்பாளர்களுக்கும் விருப்பு வாக்குகளில் ஒன்றை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.ஆனால் மஹிந்த தரப்புடன் இணைந்து தேர்தல் கேட்பதாயின் ஹக்கீம் அம்பாறையில் இறங்கவேண்டி ஏற்படும். எனவே ஹக்கீமுக்கு ரணிலும் தேவை, அதே நேரம் மஹிந்தவும் தேவைப்படுகிறார்.
மேற்கூறிய 'சிக்கிமுக்கில்களை' ஆராய்ந்து முஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்பாக தீர்மானம் மேற்கொள்ளவேண்டி வரும். பார்ப்போம் யார் முந்துகிறார் என்று.
இதற்கிடையில் எதிர்வரும்16 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் மஹிந்த பெரும்பான்மையை நிரூபிக்கும் அவசியமில்லை. தேவையாயின் ரணிலும் அவர் சார்ந்தவர்களும் மஹிந்த மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து அவரைத் தோற்கடித்துத் துரத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதனால், மேலும் கால அவகாசம் தேவை என்ற நிலை சிறுபான்மைக் கட்சிகளுக்கு மேலும் கஷ்ட்ட காலத்தையே கட்டியம் கூறி நிற்கிறது.
பஷீர் சேகு தாவூத்