LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, October 31, 2018

அந்தப்பெண்

( திரு.வெ.தவராஜாவின் "என் கொலைகாரர்கள் " என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள மறு வாசிப்பு சிறுகதை... )

மண்டபமே அதிசயத்தில் ஆழ்ந்திருந்தது. மூச்சுவிட முடியாதபடி மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. நிறைவின் நிறைவாய் அந்தப்பெண் வீற்றிருந்தாள். அதே அழகு, அதே கம்பீரம், அதே தெளிவு எல்லாமே ஒன்று சேர பார்ப்பவர்களைத் திக்குமுக்காட வைத்திருந்தது அந்தப்பெண்ணின் தோற்றமும் வருகையும்.
ஆம், திருமணமேடையிலே தனக்குக் கணவனாய் தாலிகட்ட அமர்ந்திருந்த சுந்தரமூர்த்தி நாயனாரை முழுமுதற் கடவுளான சிவனார், அவர்களது திருமணத்தைத் தடுத்து அவரை ஆட்கொண்டு தன்னுடன் அழைத்துச் சென்றபின் பழிவாங்கப்பட்ட அந்தப் பெண் பற்றி எவரும் சிந்திக்க வில்லை.
அந்தப் பெண்ணின் எதிர்காலம்... அவளது மறுவாழ்வு... இன்ப துன்பங்கள் பற்றி எவருமே கேள்வி கேட்டதாயில்லை.. வரலாறே தெரியாமல் மறைந்து போனது அந்தப் பெண்ணின் வாழ்க்கை.
அவள் தற்கொலை செய்திருந்தால் கூட எவரும் அவள் பற்றிச் சிந்தித்திருக்க மாட்டார்கள்.. கதைத்திருக்க மாட்டார்கள்... தனக்குத் தீங்கிழைக்கப்பட்ட பின்னர் அந்தப் பெண் என்ன செய்தாள்...
வேறு ஒருவரை மணந்தாளா..? 
மணப்பதற்குச் சமுகம் அனுமதித்ததா..? 
தனித்திருந்தாளா..? 
அப்படியாயின் அவளுக்கு யார் துணையாக இருந்தார்கள்,? 
அவளது வாழ்க்கைப் பயணம் எப்படிப் போனது? 
திருமணம் முறிந்ததால் பலனில்லாதவள் எனத் தூசிக்கப்பட்டாளா..? 
என்னென்ன வார்த்தைகளால் எப்படி அழைத் தார்கள்? என்பது எவருக்குமே தெரியாது.
இன்று அவளது நிலையைக் கேள்வி கேட்க அந்தப் பெண் மட்டுமல்ல அவளோடு உதவியாகப் பல பேர்.
அப்பர், சம்பந்தர், திலகவதியார். சேக்கிழார் என சமய குரவர்கள் ஒருபுறம். உமையாள், சரஸ்வதி, இலக்குமி, துர்க்கை, எனப் பெண் தெய்வங்கள் இன்னொருபுறம். ஆண்தெய்வங்கள் மறுபுறம்.
பொது மக்களில் உயர்ந்தோர், தாழ்ந்தோர், எனப் பல்வேறு சமூகத்தினரும் ஆவலாய், ஆச்சரியமாய், அமர்ந்திருந்தார்கள்.
நீதி சொல்ல உமையாள்.
உமையாளின் தீர்ப்பு எப்படி அமையப் போகிறது என்பதுதான் பலரது கேள்வி.
உமையாளோ சிவனின் ஒருபாதி. ஏற்கனவே தனது தகப்பனின்  யாகத்தில் கலந்து கொள்வதற்காகச் சிவனுடன் வாதாடித் தண்டனை பெற்றவர். சூடுகண்ட பூனை 'இவரை நம்பி அந்தப் பெண் வரலாமா...?' சபை முணுமுணுத்தது.
'இல்லை..இல்லை.. சக்தியின்றிச் சிவனில்லை எனச் சண்டை போட்டுச் சென்றவள் தான் உமையாள்.. நீதி, நியாயம் அனைத்தும் பெண்ணுக்குச் சமமென வாதிட்டவள்.. தீர்ப்புச் சரியானதாக இருக்கும்' என்றனர் இன்னும் சிலர்.
ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யமாய் எல்லாம் நடக்கிறது.
அவர்கள் காத்திருப்பதெல்லாம் சுந்தர மூர்த்திக்கும் சிவனுக்குமாகத்தான். முக்கிய பிரதிவாதிகள் அவர்கள் தானே.
சிவனார் சுந்தரரை தடுத்தாட்கொண்டு அழைத்துச் சென்ற போது, அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூடச் சொல்லாமல் சென்றவரல்லவா சுந்தரர்.
அன்று சபையில் ஒருவராவது கேட்டிருந்தால் அந்தப் பெண்ணின் கதை மாறியிருக்கும். சுந்தரமூர்த்தியின் பழி மாறியிருக்கும். இருவரதும் வழியும் மாறியிருக்கும்.
அந்தப் பெண் எதனையும் பார்த்து அலட்டிக் கொள்ளவில்லை. தெளிவுடன் வீற்றிருந்தாள். சுந்தரரைப் பார்த்து சிவனிடம் கேட்க அவளிடம் இருப்பது இரண்டே இரண்டு கேள்விகள் தான்!.
தனது திருமணத்தைத் தடுத்துச் சுந்தரரை அழைத்துச் சென்றது சரியா? எனச் சிவனிடமும், சிவன் அழைத்தாரே என்பதற்காகத் தன்னை அநாதரவாய் விட்டு விட்டுச் சென்றது சரியா? எனச் சுந்தரரிடமும் கேட்பதற்காகக் காத்திருந்தாள்.
தேவையற்ற விமர்சனத்தை எதிர்பார்த்து அவள் காத்திருக்கவில்லை.
நல்லவேளை, மணமேடையிலே தன்னை விட்டு விட்டுச் சென்றுபோன மாதிரி சிலவேளை குழந்தையும் பிறந்த பின் விட்டு விட்டுச் சென்றிருந்தால்.., பாவம்! ஒன்று மறியாத இன்னுமொரு ஜீவனுமல்லவா பழிவாங்கப் பட்டிருக்கும். தனக்குள்ளே நினைத்துக் கொண்டாள்.
சுந்தரர் விட்டுச் சென்றபோது சற்றுக் கலங்கினா லும், தற்போது தெளிவாய் இருக்கின்றாள். வாழ்வைப்புரியா சுந்தரருடன் வாழ்ந்து தனது வாழ்வை தொலைப்பதைவிட தான் புரிந்து கொண்ட வாழ்வைச் சுவைப்பது மகிழ்வாக இருந்தது அவளுக்கு...
ஆனால் அன்றைய சம்பவத்திற்கு யார் நீதி கேட்டார். எவருக்குமே நியாயம் தெரியவில்லையே....
ஒரு பெண் மணமேடையில் பழிவாங்கப்பட்ட பின்பு அவளது வாழ்வு பற்றி யார் சிந்தித்தார். அவள் இருக்கின்றாளா, இல்லையா என எவர் கவலைப் பட்டார்... ஆத்திரமாயிருந்தது அந்தப்பெண்ணுக்கு.
அன்றையதினமே அவள் தற்கொலை செய்திருந்தால் ஒரு சில நாளில் எல்லாம் முடிந்து விடும்...
மீண்டும் தொடங்கும் இந்த அராஜகம்.
இவற்றையெல்லாம் புரியவைக்கவே அவள் அந்த சபையைக் கூட்டியிருந்தாள்.
எங்கே சுந்தரர்?... சிவனார் எங்கே...? அன்றைய தினத்தில் நாயகர்களாகவும், அன்று ஒரு சிந்தனையுமின்றி அந்தப்பெண்ணை விட்டுச் சென்றதில் இருந்து குற்றவாளி களாகவும் இவர்கள்... அந்தப்பெண்ணின் கருத்துப்படி மாபெரும் குற்றவாளிகள். இவர்கள் மீதான இன்றைய விசாரணை மூலம் இதைப் போல நிகழ்வுகள் இனி நடக்காதிருக்க வழி சமைப்பதே அந்தப் பெண்ணின் எண்ணம். பெண்கள் இன்னும் பேதையாய் வாழ்வதா?...பேதைமை வேண்டாம், தற்கொலை வேண்டாம்...
அதோ! அவைக்கு சிவனும்.. சுந்தரரும்... அனைவரும் எதிர்பார்த்தபடி படை சூழவில்லை அவர்கள் தனியனாய் வந்தார்கள்.
அடுத்து என்ன நடக்கப்போகின்றது. எல்லோருமே ஆவலாய் இருந்தார்கள்...அனைவருக்கும் வணக்கம் சொல்லி அமர்ந்தார்கள் இருவரும்...நான் தான் அனைவருக்கும் பெரியவன் எனும் அகந்தை சிவனிடமும், ஆண்தானே எனும் செருக்கு சுந்தரருக்கும் குறைந்தபாடாயில்லை.
அவையைத் தொடங்கினார் உமையாள்.
ஆஹா..சிவனிடம் கேள்வி கேட்கத் தனக்கு வந்த சந்தர்ப்பத்தை எண்ணி உளதார மகிழ்ந்தாள் உமையாள். எத்தனை தடவைகள் என்னைக் கேள்வி கேட்டிருப்பார்.
எத்தனை விசாரணைகள்.. எல்லாம் அவருக்கே சாதகமாய்... இன்று எல்லாம் தலைகீழ்.
அந்தப்பெண்தான் முதலில் அழைக்கப்பட்டார். அமைதியாய் அவள் எழுந்தாள். அவைக்கு வணக்கம் சொல்லி ஆரம்பித்தாள். 
அவளது முதற் கேள்வி சிவனிடம்.
'ஐயா சிவனே! 
ஆதி நீங்கள்...அந்தமும் நீங்கள்.. 
அனைவர் மீதும் அன்பு கொண்டவர். அனைவருக்கும் நீங்கள் தான் அடைக்கலம் கொடுப்பவர்... இப்படி உள்ள நீங்கள் திருமண மேடையிலே எனக்குச் சொந்தமாக இருந்த சுந்தரரை தடுத்து... 
எனது திருமணத்தை முறித்து...  
எனது வாழ்க்கையை அழித்து...
சுந்தரரை தங்களுடன் அழைத்துச் சென்றது சரியா?' தைரியமாய் கேட்டாள் அந்தப் பெண். சிவனார் சற்று நிலை தடுமாறி விட்டார்.  திக்கு முக்காட வைத்தது அவளது கேள்வி...ஆனால் சுதாகரித்துக் கொண்டார்.' 'அம்மணி! 
அனைத்தும் உணர்ந்தவன் நான்.. உன்னுடைய வீண் விவாதம் எனக்குத் தேவையில்லை. எது சரி எது பிழை என்பது எனக்குத் தெரியும். அன்று நான் செய்தது சரியே' என்றார்.
'அப்படியானால் இன்னும் இதைத்தான் செய்யப் போகன்றீர்களா?' இடைநடுவில் கேள்வி கேட்டாள் அந்தப் பெண்.
'அப்படி நான் ஒன்றும் சொல்லவில்லை...ஆனால் அன்றைய சூழலில் சுந்தரரை தடுத்தாட் கொண்டது தவறாகத் தெரியவில்லை எனக்கு'
'அது சரி  தான். எவரிடமும் ஏன் என்னிடம் கூட அபிப்பிராயம் கேட்காமல் அழைக்கும் போது அது உங்களுக்கு தவறில்லை தான். ஆனால் நானும் ஒரு ஜீவன் தானே. என்னைப் பழி வாங்கியது தவறென்பது தான் என்வாதம்.'
'ஏன் எமக்குள் விவாதம். உமையாள் என்ன சொல்கின்றாள் எனக் கேட்போம்' என்றார் சிவனார்.
ஏளனச் சிரிப்புடன் உமையாள். 'நான் என்ன சொல்வது. தவறைச் செய்தது நீங்கள் தானே. ஒரு பெண்ணின் வாழ்க்கையைப்பறிப்பது தவறெனப் புரியவில்லையா உங்களுக்கு?.புரிந்து கொண்டு தவறை ஏற்றுக் கொள்ளுங்கள்' ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் உமையாள்.
'உமையே சிந்தித்து முடிவு சொல். பெண்ணுக்காகப் பெண்ணே பரிந்து பேசுவது தவறு...பக்கச்சார்பு. பக்குவமாய் அவையோரிடம் கேள். நான் செய்தது சரியா தவறாவென.' சற்றுச் சினத்துடன் சொன்னார் சிவனார்.
'சிந்திக்க வேண்டியது நானல்ல: நீங்கள். புரிந்து கொள்ள வேண்டியதும் நானல்ல: நீங்கள். இது பெண்ணுக்குப் பெண் பரிந்து பேசுவதல்ல சமூகமே புரிய வேண்டுமென்பதற்காக நன்றாகப் புரிந்தே பேசுவது.
'சரி!சரி! நமக்குள் சச்சரவு வேண்டாமென நினைக்கின்றேன். சபையோரைக் கேள்! சரி பிழை பற்றி.'
'சபை என்ன சொல்லும்... ஒன்றுமே சொல்லாது: அன்றும் சொல்லவில்லை. இன்றும் சொல்லப் போவதுமில்லை.'
'அப்படியானால் நீர் சொல்வதை ஏற்க முடியாது.' இது சிவனார்.
'ஏற்பதும் ஏற்காமல் போவதும் உங்களது மனோநிலையைப் பொறுத்தது. இவ்வளவு காலம் சென்றும் நீங்கள் உண்மையைப் புரியாவிட்டால் நாம் என்ன செய்வது.'
'சரி! சரி! ஒரு கதைக்காகத் தவறென ஏற்றுக் கொண்டால் தண்டனை என்ன?' சிவனார் கேட்டார்.
தண்டிப்பதல்ல எமது நோக்கம். தவறை உணர்த்துவதும் இனிமேலும் இதே தவறு நடக்காமல் தடுப்பதும் தான்' உமையாள் சொன்னாள்.
சுந்தரர் எழுந்தார். 'சிவனிடம் தானே கேள்வி. என்னை ஏன் அழைத்தீர்கள்?'
'இல்லை.. இல்லை.. தங்களிடம் தான் முக்கிய கேள்வி இருக்கின்றது. சற்று அமருங்கள். இன்றும் உங்களைத் தடுத்தாளமாட்டார் சிவனார்.' ஏளனமாய்ச் சொன்னாள் அந்தப் பெண்.
'சரி..சரி..பெண்ணே! சுந்தரரிடம் என்ன கேள்வி..' இது உமையாள்.
'சிவனார் தடுத்தாட்கொண்டார் சுந்தரரை சரி...
அது அவரது விருப்பு வெறுப்பு..
ஆனால் அவரை நம்பி வந்த என்னை மணமேடை யிலே அநாதரவாய் விட்டுச் சென்றது சரியா? இதுதான் கேள்வி.' 
'அது..அது.. நான் ஒன்றும் தானாகச் செய்ய வில்லை. சிவன் தடுத்தார். நான் சென்றேன்.' பதட்டத் துடன் பதிலளித்தார் சுந்தரர்.
'சிரிப்பாகவிருக்கின்றது. என்னிடம் விருப்பம் சொன்னது நீங்கள்... திருமணம் முடிக்க முடிவெடுத்தது நீங்கள்.. மணமேடையைத் தெரிவு செய்து அழைப்புக் கொடுத்தது நீங்கள்...எவரோ அழைத்தார். நான் சென்றேன் எனச் சொல்வதில் வெட்கமில்லையா உங்களுக்கு?' 
சற்று ஆத்திரமாகச் சொற்களை வீசினாள்; அந்தப் பெண்.
'அன்று நான் சென்றேன் என்பதற்காக எமது வாழ்க்கை என்ன முடிந்து விட்டதா?' சுந்தரர் கேட்டார்.
'கேள்வி அதுவல்ல. நீங்கள் செய்தது சரியா தவறா என்பது தான்'
'எனது வாழ்க்கை முடியவில்லை என்பதில் தாங்கள் பெருமைப்பட ஒன்றும் இல்லை. ஆனால் என்னைப்போல இன்னும் பல பேர்களுக்கு முடிவு வரக் கூடாதே என்பதற்காகத்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.... இங்கு வந்திருக்கின்றேன்.
உம்மைப் போலக் கோழைத்தனமாய் நானும் முடிவெடுத்திருந்தால் அன்றே எனது வாழ்க்கை முடிந்திருக்கும்... இன்று உங்களைக் கேள்வி கேட்க யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.' பட பட வெனக் கொட்டித் தீர்த்தாள் அந்தப் பெண்.
'இன்னுமா நீங்கள் வாதாடப் போகின்றீர்கள்? அந்தப் பெண் தனக்காக வாதாடவில்லை. தனது சமூகத்திற் காக வாதாடுகின்றார். அவரது வாதாட்டத்தில் எதுவித தவறும் தெரியவில்லை. இதைப் புரிந்து கொண்டால்...தாங்கள் தவறை உணர்ந்து கொள்வீர்கள்..' சற்றே இழுத்தாhர் உமையாள்.
'உமையே! சற்று நிதானமாய் பதில் சொல். இன்றைய உன் தீர்ப்பு.. உனது நாளைய வாழ்க்கையைக்கூட மாற்றி விடலாம்..கவனம் கவனம்' ஆவேசமாகக் கர்ஜித்தார் சிவனார்.
'சிவனாரே! இது உங்கள் சபையல்ல.
இது பொதுச் சபை.
காலம் மாறுவதும் வாழ்க்கை மாறுவதும் தான் நியதி என்றால் அதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்...எனது வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கண்டவள் நான். இன்று நான்தான் நீதிபதி. நியாயத்தைச் சொல்வது தான் எனது வேலை.. ஆத்திரப்படுவதற்கோ, ஆவேசப்படுவதற்கோ இங்கு ஒன்றும் நடந்துவிடவில்லை.அமைதியாhய் இருங்கள்.' அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள் உமையாள்.
' அதுதானே! ஏன்... இப்படி ஆத்திரப்படுகின்றார் சிவனார்?' முதல் முதலில் ஒரு குரல் சபையிலிருந்து...
'அற்புதம்...அற்புதம்.. ஆண்களுக்கெதிராக ஆட்சேர்ப்போ இது? நடக்கட்டும். நடக்கட்டும்.. எப்போது எங்கே என்ன செய்யவேண்டுமென்பது எனக்குத் தெரியும்...ஆ..ஆ....ஆ...' பலமாய்ச் சிரித்தார் சிவனார்.
ஆத்திரமாய் சபை நடுவே வந்தாள் அந்தப் பெண்.
'சிவனே! நிறுத்துங்கள் உங்கள் ஆணவச் சிரிப்பை. என்னைப் போல எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் தெரியுமா? அவர்களைப் பற்றி யார் நினைக்கின்றார்கள்? நாம் பட்ட துன்பங்கள் யார் சொன்னார்கள்? வரலாறும். சரித்திரமும், இதிகாசமும், புராணமும் உங்களுக்காகத்தான். இனிமேல் நடக்காது இந்தத் திருவிளையாடல்.' பொடிவைத்துச் சொன்னாள் அந்தப் பெண்.
'எப்போ..எப்படி..என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய என்னால் மட்டும் தான் முடியும். ஆடலுக்கும் நான் தான்.... பாடலுக்கும் நான் தான்...' செருக்கோடு சொன்னார் சிவனார்.
உமையாள் தடுத்தாள்...
'இங்கு நாம் கூடியிருப்பது அந்நப் பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவத்திற்கு நீதி கேட்க...
மணமேடைக்கு வந்த பெண்ணை வஞ்சித்து இடைநடுவிலே அநாதரவாய் விட்டுச் சென்ற சுந்தரரும் அதற்குத் துணையாய் நின்ற சிவனாரும் செய்தது சரியா? பிழையா? இதுதான் விவாதம்...விவாதிக்க இதில் என்ன இருக்கின்றது? பிழை பிழைதான். இது சிவனாய் இருந்தாலும் சரி: எமனாய் இருந்தாலும் சரி.' சபையிலிருந்து இன்னுமொரு குரல் தெளிவாய் வந்தது. 'ஆமாம்...ஆமாம்...' இன்னும் சில குரல்கள்.
சுந்தரர் உறைந்து போனார். சிவனாரிடமும் சிறு ஆட்டம். சுதாகரித்துக் கொண்டார்.
'எது சரி..எது பிழை..எல்லாம் நாம் அறிவோம்.
சுந்தரரை தடுத்தாட்கொண்டது சரிதான். என்ன சுந்தரரே.. அமைதியாக இருக்கின்றீர்..' 'இல்லை....' இழுத்தார். 'ஆமாம்! நீங்கள் சொன்னது தான் சரி'
'நன்றாயிருக்கின்றது பதில். ஏன் உங்களுக்கென்று சுயபுத்தி இல்லையா? சிவன் மட்டுமல்ல நீயும் பித்தன் தான் என்பது இப்போது தான் புரிகிறது எனக்கு.' என்றாள் அந்தப் பெண்.
' புரிந்தது தானே! ஏன் இன்னும் விவாதம்? விட்டு விட்டுச் செல்லலாமே' என்றார் சிவன்.
' எனக்குப் புரிந்து விட்டது. நீங்கள் செய்தது தவறு என்பதைச் சமுகத்திற்குப் புரிய வைக்க வேண்டாமா?  இதே தவறை இனி எவரும் செய்யாமல் தடுத்து விட வேண்டாமா?
இதற்காகத்தான் இந்தச் சபை கூட்டப்பட்டிருக் கின்றது.' பொரிந்து தள்ளினார் உமையாள்.
' குற்றம் புரிந்தவர் எவர் தான் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பெண்ணின் வாதத்திலிருந்தும் சபையோரின் கருத்துகளிலிருந்தும் சுந்தரரும் சிவனும் புரிந்தது குற்றமே என்பது தெளிவாகின்றது. மறு கதைக்கே இடமில்லை. ஆனால்...
இதற்கு என்ன தண்டனை என்பது தான் இங்கு கேள்வி' தெளிவாகக் கூறினாள் உமையாள்.
'என்ன.. ஆதி முதல் அந்தம் வரை அறிந்த... ஆள்கின்ற முதல் மகனுக்கு, முதல்வனைப் பூசித்த பூசிக்கின்ற ஆண்மகனுக்கும் தண்டனையா? இது நல்ல வேடிக்கை. உமையாளுக்குப் பித்து பிடித்து விட்டதா? இதற்கு நான் தரும் சாபம்...' கையைத் தூக்குகின்றார் சிவனார்.
'சற்றுப் பொறுங்கள் சிவனே! எத்தனை நாளைக்கு இந்தப் பித்தலாட்டம்? ஆணுக்கும் பெண்ணுக்கும் நீதி ஒன்று தான்... யார் பிழை செய்தாலும் தண்டனை உண்டுதானே.
சகலதும் அறிந்தது நீங்கள் என்றால் ஏன் இந்த அநீதி?...'
தூக்கின கைகளைத் தொங்கப் போட்ட சிவனிட மிருந்து வார்த்தைகள் வரவில்லை. தலை கவிழ்ந்த சுந்தரரோ சிவனின் காலடியில். அந்தப் பெண் எழுந்தாள்... அவையைப் பார்த்தாள்... அமைதியாய் அவள் சொன்னாள்...
'உமையே! தண்டனையைச் சபையோர் தரட்டும். பெண்களை வஞ்சிக்கும் ஆண்களுக்கு அது நல்ல பாடமாய் இருக்கட்டும். என்னைப் போல இருளில் விடப்பட்ட அபலைப் பெண்களின் மறுபக்கத்தை இலக்கியங்கள் சொல்லட்டும். வரலாறு பதியட்டும். 
நான் வருகின்றேன்...' செல்லத் தயாரானாள்.' வாழ்க! வாழ்க!' சபையே ஒலித்தது. மீண்டும் சபையைப் பார்த்தாள் அந்தப்பெண்.
'வாழ்த்துக்கள் தேவையில்லை எனக்கும் என் போன்ற பெண்களுக்கும்... எமக்குத் தேவை வாழ்க்கை... அதுவும் நாங்கள் விரும்பிய வாழ்க்கை...நான் வருகின்றேன்....' வேகமாய் வெளியே சென்றாள் அந்தப்பெண். உமையாளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சிவனைப் பார்த்தார். காலடியில் கிடக்கும் சுந்தரரையும் பார்த்தார்...
'என்ன சொல்வது தண்டனை என்ன?' அமைதி யாக இருந்த சபையோரைக் கேட்டார்? பதிலொன்றும் வரவில்லை சபையிடமிருந்து... அமைதி நீண்டது...
அமைதியாய் இருந்த சபையைக் குழப்ப விரும்பவில்லை உமையாள்...'சிந்திக்கத் தொடங்கி விட்ட சபையோரே நன்றாகச் சிந்தியுங்கள்...
சிவனுக்கும் சுந்தரருக்கும் என்ன தண்டனை கொடுப்பது என்பதை எதிர்வரும் முப்பது நாட்களுக்குள் எழுதி அனுப்புங்கள்... நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரன் பரம்பரையினர் நீங்கள்...
சரியான தீர்ப்பைச் சொல்லுங்கள்...
தவறைச் செய்தவர்கள் தலை கவிழட்டும்...
அவர்களது வரலாறு மாற்றி எழுதப்படட்டும்...
பெண்களை வஞ்சிப்பவர்களுக்கு அது பாடமாய் அமையட்டும்...' அழுத்தம் திருத்தமாய்  அறிவித்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் உமையாள்...
சபையோர் எழுந்தனர் புதுமூச்சுடன்.. உமையாளின் பின்னே சென்றனர்.... வெறிச்சோடிக் கிடந்த சபை நடவே தீண்டத்தகாதவராய் சிவனும் சுந்தரரும்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7